கடந்த இருபது நாட்களுக்கு முன் முதல்முறை கொட்டித்தீர்த்த மழைவெள்ள பாதிப்பிற்காக நடிகர்கள் நிவாரண நிதி வழங்க ஆரம்பிக்கவும் மழை தனது அடுத்த இன்னிங்க்சை ஆரம்பிக்கவும் சரியாகத்தான் இருந்தது.. ஆனாலும் நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களால் இயன்றதை கொடுத்துள்ளார்கள். கொடுத்து வருகிறார்கள்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என மலேசியாவில் படப்பிடிப்பில் இருந்தபோதே ரஜினி சொன்னதாக செய்திகள் வெளியாகின. இப்போது பத்து லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். வீடிழந்த மக்கள் தங்குவதற்கு தனது மண்டபத்தையும் திறந்து விட்டார். லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்து பிரமிக்க வைத்தார்.
சூர்யா 25 லட்சம், விஜய் 18 லட்சம் என உள்ளூர் நடிகர்கள் ஒருபக்கம் நிதி கொடுத்துவந்த வேளையில் ஆந்திராவை சேர்ந்த இளம் நடிகர் அல்லு அர்ஜூன், மக்கள் உதவிக்காக 25 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தார். இன்னும் சில தெலுங்கு நடிகர்களும் தங்களது பங்காக நிவாரண நிதியை அறிவித்தனர்.
இதுபோக மலையாள நடிகர்களும் சென்னையில் தங்கும் இடம், சாப்பாட்டு வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தந்ததுடன் கொச்சியில் இருந்து நிவாரண பொருட்களை சேகரித்து லாரி லாரியாக அனுப்பி வைத்தனர். இது ஒருபக்கம் என்றால் நடிகர்கள் சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி ஆகியோர் களத்தில் இறங்கி தண்ணீருக்குள் என்று நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்..
பின்னர் விஷால், கார்த்தி, விஷ்ணு என மற்றவர்களும் நிவாரண பணிகளில் தங்களை இணைத்துக்கொண்டனர்.. கடலூர் பகுதிகளில் நடிகர் சந்தானம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தம் இல்லாமல் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
இவர்களுக்கு நாம் நன்றி சொல்லும் அதே வேலையில், சென்னை மக்கள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு மறுவாழ்வு மேற்கொள்வதற்கான உதவியையும் தங்களால் இயன்றவரை செய்தால் நன்றாக இருக்கும் என்கிற கோரிக்கையையும் வைக்கிறோம்..