டெரர் படங்களுக்கு பெயர்போன ராம்கோபால் வர்மாவின் கைவண்ணத்தில் தெலுங்கில் ‘ஐஸ் க்ரீம்’ ஆக வெளியாகி இப்போது தமிழ்ரசிகர்களுக்கு விருந்து வைப்பதற்காக ‘சாக்கோபார்’ ஆக உருமாறி வந்திருக்கிறது.
படம் முழுதும் கிட்டத்தட்ட வெறும் ஆறேழு மனிதர்கள்… ஒரு பங்களா.. காதலனுடன் தனியாக வந்து தாங்கும் நாயகி என குறைந்த பட்ஜெட்டில் நிறையவே மிரட்டியிருக்கிறார் வர்மா. குறைந்த பட்ஜெட் என்பதாலோ கதாநாயகி தேஜஸ்விக்கும் குறைவான ஆடைகளையே கொடுத்து, அதையும் அடிக்கடி கழட்டி மாட்ட வைத்து, படம் பார்ப்பவர்களை சாக்கோபாராய் உருகவைக்கிறார்.
கதாநாயகி தேஜஸ்வியை பார்ப்பதற்கே கொடுத்த காசு சரியாக போய்விடுகிறது.. படிப்பதற்காக பங்களாவுக்கு வருகிறார்.. இரண்டு நாட்களில் நான்கு முறை குளிக்கிறார்.. கட்டிலில் ஒய்யாரமாக படுக்கிறார்.. கதவு தட்டப்படும்போது எழுந்து, நளினமாக நடந்து வருகிறார்.. மீண்டும் போய் படுக்கிறார்.. மாடிப்படி ஏறுகிறார் இறங்குகிறார். ஆனால் இது அத்தனையையும் திரும்ப திரும்ப சலிக்காமல் பார்த்து ரசிக்க முடிகிறது என்றால் அங்கேதான் இருக்கிறது தேஜஸ்வியின் தேஜஸ்..
பேய்ப்படங்களின் நாயகனும் கல்யாண வீட்டு பெட்ரோமாக்ஸ் லைட்டும் ஒன்றுதான். அதேபோலத்தான் நாயகன் நவ்தீப்பையும் தேவைப்படும்போது பயன்படுத்தி இருக்கிறார் வர்மா. மற்ற துணை கதாபாத்திரங்களும் தங்கள் பங்கிற்கு டெரர் ஏற்றுகிறார்கள்.. கவர்ச்சி, திகில் என இரண்டிலும் ரசிகர்களை நகரவிடாமல் கட்டிப்போடும் வித்தையை எளிதாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி.. அதிலும் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரொம்பவே ரசித்து பண்ணியிருக்கிறார் மனிதர். பிரத்யோதனின் பின்னணி இசையும் நம் ஹார்ட் பீட்டை அதிரவைக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கமுடியும் என சவால் விட்டு ராம் கோபால் வர்மா எடுத்த படம் தான் இது.. சில லட்சங்களில் எடுக்கப்பட்டு பல கோடிகள் லாபத்தை அள்ளிய படம் இது. ஆனால் அதற்கேற்ற மாதிரி விஷயம் உள்ளே இருக்கத்தான் செய்கிறது. வழக்கமான தனது பேய்ப்பட பாணியில் கூடவே கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி அனுப்பும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.
மொத்தத்தில் தேஜஸ்விக்காவே இன்னொரு தடவை ‘சாக்கோ பார்’ போலாமா என்கிறான் ரசிகன்.