கொஞ்சகாலமாக அடங்கி கிடந்த தனுஷ்-சிவகார்த்திகேயன் அக்கப்போர் மீண்டும் துவங்கியுள்ளதாகவே தெரிகிறது. ஒருகாலத்தில் தனுஷ் தட்டிக் கொடுத்து வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயன் இப்போது தனுஷுக்கே போட்டியாக வளர்ந்து நிற்கிறார்.
சிவகார்த்திகேயன் படங்களைவிட ஒரு ரூபாயாவது அதிகம் தனது படம் வசூலிக்க வேண்டும் தீராத வேட்கை தனுஷிடம் உள்ளதோ இல்லையோ அவர் ரசிகர்களிடம் அமோகமாக உள்ளது. அது இணையத்தில் இப்போது போட்டியாக வெடித்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பை கடந்த இருபதாம் தேதி மாலை ஏழு மணிக்கு வெளியிட்டனர். அடுத்த அரை மணிநேரத்தில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய லோகோ வெளியீடு குறித்த அறிவிப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து யுத்தம் தொடங்கியது.
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இரு நடிகர்களின் ரசிகர்களும் பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் நீயா நானா போட்டியை ஆரம்பித்தனர். அது இன்னும் முடியவில்லை. கௌதம் அதனை விசிறி விட்டிருக்கிறார்.
சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் சீமராஜா பாடலை வெளியிட்டால் , இன்னொரு பக்கம் ஏற்கனவே வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி பாடலின் இன்னொரு வடிவத்தை மறுநாள் வெளியிடுவதாக கௌதம் மேனன் அறிவிக்கிறார்.
மூன்று வருடங்களாக இதோ, அதோ என தயாராகிவரும் தனுஷ் படத்தின் போஸ்டர் டீசரை வெளியிடுவதற்கு வேறு நாட்களே கிடைக்கவில்லையா என பரவலாக பலர் பேசிக்கொள்வதையும் கேட்க முடிந்தது.