கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் கடந்த 19-ந்தேதி நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஷங்கர் இந்த சம்பவம் குறித்து நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன்.
எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.