சமீபகாலமாக சினிமா சம்பந்தமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் படக்குழுவினரின் பேச்சுக்கள் கொஞ்சம் எல்லை மீறி போவதுபோலத்தான் தெரிகிறது. பொதுவாக பல சினிமா நட்சத்திரங்கள், தாங்கள் மது அருந்தும் விஷயத்தை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார்கள்.. பின்னே.. யாரவது தங்களது இமேஜை தாங்களே கெடுத்துக்கொள்ள நினைப்பார்களா என்ன..?
ஆனால் அந்தக்காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. சினிமாக்களில் தண்ணியடிக்கும் காட்சி தவறாமல் இடம்பெறுவது போல, இப்போது சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களிலும் தாங்கள் தண்ணியடித்த விஷயத்தை சர்வ சாதரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.. காமெடியாக பேசுகிறோம் என தன்னுடன் தண்ணியடித்த மற்றவர்களையும் தர்ம சங்கடத்தில் மாட்டிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற ‘வா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் ரத்தினசிவா, தான் உதவி இயக்குனராக சேர்வதற்காக, தனது குருநாதர் பன்னீர் செல்வத்திற்கு சரக்கு வாங்கி கொடுத்த கதையை விலாவாரியாக சொன்னார். அதுவும் பன்னீர் முன்னிலையிலேயே.. அதை தொடர்ந்து தனது நட்பு வட்டாரம் சரக்கடித்து பண்ணிய கூத்தையும் வெளியிட்டார்.
அதேபோல சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘வை ராஜா வை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் மனோபாலாவை கலாய்த்த விவேக், அந்தப்படத்தை ஜப்பானில் உள்ள கப்பல் ஒன்றில் படமாக்கும்போது மனோபாலா பீர் பார்ட்டி வைத்த விபரங்களை வெளியிட்டு மனோபாலாவை நெளிய வைத்தார். கடைசியாக தான் பீர் அடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் சொல்லிக்கொண்டார் விவேக்.
எதிரே உட்கார்ந்து கேட்பவர்களுக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் பெயரும் சிரிப்பாய் சிரித்துவிடும் அபாயமும் இருக்கிறதல்லவா..? தவிர மதுவை பலரும் பகிரங்கமாக எதிர்க்கும் இந்த சூழலில், அனைவரும் ரசிக்கும் சினிமாக்காரர்கள் இப்படி பேசுவதை இனியாவது குறைத்துக்கொண்டால் நல்லது .