விஷால் வைத்த செக் ; தயாரிப்பாளர் சங்கத்திடம் பணிந்த பெப்சி..!


தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் லைட்மேன் பிரிவை சேர்ந்த சங்கத்தினர் தங்களது வெளியூர் பயணப்படியை குறைத்துக்கொள்ள மாட்டோம் என சமீபத்தில் ’பில்லா பாண்டி’, பிரபுதேவா நடிக்கும் ’யங் மங் சங்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை தேவையில்லாமல் நிறுத்தினார்கள்.. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.

இருந்தாலும் பெப்சி தொழிலாளர்களின் பிரச்னை தொடர்ந்து நடப்பதால் இதற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என இந்தப் பிரச்னை பற்றி பேசத் தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் நடிகர் விஷால் தலைமையில் நடந்தது.

கூட்டத்தின் முடிவில் ஊதிய பிரச்னையை காரணம் காட்டி படப்பிடிப்பை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை. ஊழியர்கள் மீது மரியாதை இருந்தாலும் அதற்காக எங்களது தயாரிப்பாளர்களை அவமானப்பட விடமாட்டோம். பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து நாளை முதல் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது’ என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் விஷால்..

இதை தொடர்ந்து பெப்சியிலிருந்து அவசர அவசரமாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.. அதில் கூறியுள்ளதை பார்ய்த்தால், “நாங்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக எவ்வளவோ எங்கள் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து விட்டுக்கொடுத்துள்ளோம்.. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இப்படி திடீரென அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் எப்போதும் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.. இனி, மேற்கூறிய சர்ச்சைகள் நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்கிறோம்” என இறங்கி வந்துள்ளது நன்றாகவே தெரிகிறது..

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.. சங்கத்தை உடைத்து ஆட்களை தன்பக்கம் இழுப்பதில் விஷால் கில்லாடி.. இதை ஏற்கனவே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் அதிரடியாக நடத்தியும் காட்டியுள்ளார். அதனால் அவர் பெப்சியை உடைத்து தொழிலாளர்களை பிரிக்க நீண்ட நாட்கள் ஆகாது என்பதை உணர்ந்தே இப்படி அவசர அவசரமாக இறங்கிவந்து அறிக்கை விட்டுள்ளார்கள் என பேசிக்கொள்ளப்படுகிறது.