“மோசடி செய்கிறார் ஆர்.பி.சௌத்ரி” ; பைனான்சியர் குற்றச்சாட்டு..!


லாரன்ஸ் நடித்து ஒரே நேரத்தில் ரிலீஸுக்கு தயாராகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘சிவலிங்கா’ ஆகிய படங்கள் இரண்டுமே ரிலீஸாக முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதில். ‘மொட்ட சிவா’ வெளியானால் அது பின்னாடியே ‘சிவலிங்கா’வும் சிக்கலின்றி ரிலீஸ் ஆகிவிடும்.. ஆனால் ‘மொட்ட சிவா’ வெளியாவதில்தான் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில் வரும் மார்ச்-10ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகும் என்கிற தகவல் ஒன்று பரவி வருகிறது.. ஆனால் இந்தப்படம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ள பைனான்சியர் போத்ரா மார்ச்-10ஆம் தேதி படம் ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்றும் அப்படி வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் இந்த விஷயத்தில் மோசடி நடக்கிறது கூறியிருக்கிறார்..

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “இந்தப் படத்துக்குத்தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது. எனவே தான் படத்துக்கு நீதிமன்றம் தடை ஆணை வழங்கியது. அந்தத் தடையை இந்த நேரம் வரை விலக்கப்படவோ ரத்து செய்யப்படவோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

மார்ச் 10-ல் படம் வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன. இது எவ்வளவு மோசடியானது.? மீண்டும் சொல்கிறேன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்துக்கு தடை நீக்கப்படவில்லை. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை எல்லாம் நம்ப வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அப்படி விளம்பரம் செய்யும் ஆர்.பி.செளத்ரி, டாக்டர் செல்வம் மீது இது பற்றி புகார் கொடுக்கப் போகிறேன்” என போத்ரா கூறியுள்ளார்.