அப்படியென்ன ‘குசேலன்’ மூலம் ரஜினிக்கு நடந்தது என்பது தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன பிளாஸ்பேக்.. மலையாளத்தில் மம்முட்டி, சீனிவாசன் நடிப்பில் வெளியான மாஸ்டர் ஹிட்டான ‘கத பறயும்போல்’ படம் தான் தமிழில் ரஜினி, பசுபதி நடிக்க ‘குசேலன்’ ஆக வெளியானது. அங்கே மம்முட்டி வெறும் 20 நிமிட காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். மற்றபடி சீனிவாசன் தான் கதையின் நாகன.. படத்தின் ஹீரோவும் கூட..
ஆனால் இங்கே தமிழில் சூப்பர்ஸ்டாரை அப்படி கெஸ்ட் ரோலில் காண்பித்துவிட முடியுமா..? உடனே பி.வாசு, திரைக்கதையில் சில இழுவை வேலைகளை செய்து ரஜினி மொத்தப்படம் வருவது போலவே ஒரு தோற்றத்தை உருவாக்கினார். ஆனால் படம் பூஜை போட்ட நாளன்றே ரஜினி, “இது என் படம் அல்ல. பசுபதி படம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என திரும்ப திரும்ப சொன்னார்..
ஆனால் இயக்குனர் வாசு, பிசினஸ் பேசிய தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி உட்பட யாரும் அதை காதில் வாங்கி கோளாமல் ரஜினி படத்துக்கு என்ன பிசினஸ் பேசுவார்களோ அப்படித்தான் பேசினார்கள்.. ஆனால் படம் பிளாப் ஆனது. வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய நட்டம்.. அதன்பின் அவர்கள் ரஜினியிடம் முறையிட்டு கிட்டத்தட்ட அவர்களுக்கு 33 கோடி ரூபாய் வரை செட்டில் செய்தார் ரஜினி..
தற்போது ‘பசங்க-2’ படத்தில் நடித்துள்ள சூர்யாவின் பயமும் அதுதான். நல்ல கதையாக இருக்கிறதே என பாண்டிராஜ் படத்தை தயாரிக்க முன்வந்த சூர்யா, பாண்டிராஜின் வேண்டுகோளுக்கு இணங்கி அதில் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்தார்.. காரணம் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம்.
ஆனால் போகப்போக பாண்டிராஜ், சூர்யாவுக்கான காட்சிகளை நீட்டி கிட்டத்தட்ட படத்தில் சூர்யா ஒருமணி நேரம் வருவதுபோல மாற்றிவிட்டாராம். இப்போது விஷயம் என்னவென்றால் படத்தை தன்னை முன்னிலைப்படுத்தி, அதாவது வழக்கமான தன்னுடைய படங்களைப்போல பிசினஸ் பேசவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறாராம்.
காரணம் இது பாண்டிராஜின் படம், அவருடைய படங்களுக்கு என்ன பிசினஸ் இருக்குமோ அதை பேசினால் மட்டும் போதும். படம் சுமாராக போனாலும் கூட, அதுவே ஓரளவு போட்ட காசை எடுத்து கொஞ்சம் லாபமும் கொடுத்துவிடும்.
ஆனால் தன்னுடைய படமாக நினைத்து வழக்கமான பெரிய தொகையில் பிசினஸ் பேசி, ஒருவேளை படம் போகாவிட்டால், விநியோகஸ்தர்களுக்கு திருப்பிக்கொடுத்த ‘குசேலன்’ ரஜினி நிலைக்கு தான் ஆளாகவேண்டாம் என்று முன்கூட்டியே உஷாராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாராம் சூர்யா.