உங்க பிசினஸ் விளம்பரத்துக்கு மட்டும் ரஜினி தமிழன் ஆயிட்டாரா பாரதிராஜா சார்..?


சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது சென்னையில் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவம் வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் கருத்து கூறினார். தமிழர்களின் ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழும் ரஜினி எங்களை வன்முறையாளர்கள் என்று கூறுவதா என்று அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாரதிராஜா தற்போது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள பாரதிராஜா, “பேசும்போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் எங்கள் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்” என ரஜினியை விமர்சித்துள்ளார்.

இதே இயக்குனர் இமயம் பாரதிராஜா தான், கடந்த வருடம் தான் துவங்கிய பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிலைய திறப்பு விழாவிற்கு, ரஜினி வந்து தான் துவக்கி வைக்கவேண்டும் என ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தவர்.. ரஜினியும் அவரது அழைப்பை தட்டாமல் அந்த விழாவில் கலந்துகொண்டு பாரதிராஜாவை கௌரவப்படுத்தினார். கமலும் கூட கலந்துகொண்டார்.

அப்போது “ரஜினி மாதிரி 100 ஸ்டார் வரலாம். ரஜினி மாதிரி ஒரு நல்ல மனிதன் வர முடியாது” என சொன்ன அதே வாய்தான், இன்று அதே நல்ல மனிதரைப் பற்றி வாய் கூசாமல் பழி கூறி பிதற்றுகிறது அப்போதெல்லாம் இதே பாரதிராஜாவுக்கு அக்மார்க் தமிழர்களான சீமானும் அமீரும் எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையே..? அது எப்படி தெரியும்..? அது பக்கா பிசினஸ்… அதை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் ரஜினி போன்ற புகழ் வாய்ந்தவர்கள் அந்த நிறுவனத்தை திறந்து வைத்தால் தான் பப்ளிசிட்டி கிடைக்கும்.. மாணவர் கூட்டம் அலைமோதும்.

அங்கே வெறும் தமிழ் உணர்வு பேசினால் மட்டும் வியாபாரம் நடக்காது என்று பாரதிராஜாவுக்கு நன்றாகவே தெரியும். அப்போது உதவிக்கு தேவைப்பட்ட ரஜினி, இப்போது திடீரென கன்னடன் ஆகிவிட்டார். எல்லா விஷயத்திலும் ரஜினியும் தன்னைப்போல கருத்துச்சொல்ல வேண்டும், சீமானைபோல தினமும் களத்தில் இறங்கி போராடவேண்டும் என நினைக்கும் பாரதிராஜாவின் எண்ணத்தை அறியாமை என்று சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை