இணைந்த கைகள் ; எப்படி நடந்தது இந்த மாற்றம்..?


சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு முன்பு அவர் பிரச்சனைகளில் சிக்கி வந்தார். ஆனால் தற்போது மனிதர் அநியாயத்திற்கு மாறிவிட்டார். வீட்டு பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாக புகார் எழுந்த நிலையில் அவர் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்துவிடும் அளவுக்கு மாறியுள்ளார். பட விஷயத்தில் மட்டும் அல்ல பல விஷயத்தில் சிம்பு மாறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கும், சிம்புவுக்கும் ஆகாது என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் அந்த மனக்கசப்பை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு விஷாலுடன் சமரசமாகிவிட்டார் சிம்பு. நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது குறித்து நேற்று நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட சிம்பு விஷாலை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது அங்கிருந்தவர்களை வியப்பு கலந்த மகிழ்ச்சி அடைய வைத்தது.

நடிகர்களின் படங்களின் வசூல் விவரத்தை நடிகர்களுக்கும் தெரிவித்தால் அவர்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வார்கள் என சிம்பு சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியிருந்தார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட விஷால் அதுபற்றிய ஆலோசனையையும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வரும் ஜூன்-1 முதல் வெளிப்படையான கணினிமயமாக்கப்பட்ட டிக்கெட் விற்பனை முறை நடைமுறைத்தப்பட இருக்கிறது. இதனால், சிம்பு விஷாலோடு நெருக்கமாகி இருக்கிறார். நடிகர்களின் ஒற்றுமை ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சிம்பு எப்படி இந்த அளவுக்கு மாறிவிட்டார் என்று வியக்காதவர்களே இல்லை.

இதற்கு முன்பு நடிகர்சங்க தலைவராக இருந்த சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் சிம்புவுக்கு தவறான தகவல்களை கொடுத்து, விஷாலுக்கு எதிராக அவரை பேச தூண்டிவிட்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது என பேசிக்கொள்கிறார்கள்.. தற்போது விஷாலின் நேர்மை சிம்புவுக்கு தெரியவந்ததால், எக்கோவை உதறி தள்ளிவிட்டு சினிமாவின் நலனுக்காக விஷாலுடன் கைகோர்த்துள்ளார் சிம்பு என்றும் சிலர் சொல்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் சிம்புவின் இந்த மாற்றம் நன்றாக உள்ளது என்று அவரை பாராட்டுகிறார்கள் தமிழ் சினிமா உலகில் நிகழ்ந்து வரும் நல்ல மாற்றங்களின் பட்டியலில் இதுவும் மகிழ்ச்சிக்குரியது தான்.