விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்தவாரம் வெளியாக இருக்கும் ‘பிச்சைக்காரன்’ அதிரடி படமாக உருவாகியுள்ளது. மென்மையான படங்களை இயக்குபவர் என பெயர் வாங்கிய இயக்குனர் சசி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது தான் ஆச்சர்யமே… சில மாதங்களுக்கு முன் இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்றபோது அதில் பேசிய தயாரிப்பாளர் ஒருவர், இனி நீங்கள் ‘பூ’ சசி இல்லை.. ‘புயல்’ சசியாக மாறுவீர்கள்” என பாராட்டினார்..
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சசியிடம், நீங்கள் புயல் சசியாக மாறுவீர்களா என கேட்கப்பட்டது.. புயலாக மாறவேண்டும் என்றால் அதற்கு வேறு மாதிரி அவுட் அன்ட் அவுட் ஆக்சன் படங்களை இயக்கவேண்டும்.. ஆனால் பிச்சைக்காரனில் ஆக்சன் இருந்தாலும் புயலாக மாற வைக்கும் அளவுக்கு ஆக்சன் இல்லை என்று கூறினார்.
சசி தனது படங்களில் கிளைமாக்ஸில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி தான் ரசிகர்களை வெளியே அனுப்புவார்.. இதிலும் அப்படி ஏதாவது இருக்கும் என எதிர்பார்க்கலாமா என ஒரு நிருபர் கேட்டார்.. “எனது முந்தைய படங்களில் அந்த தாக்கம் இருந்தாலும், கடைசியாக நான் இயக்கிய ‘555’ படத்தில் அந்த தாக்கம் இல்லை என்பது எனக்கே தெரியும்.. ஆனால் பிச்சைக்காரனில் ஒரு அழுத்தமான விஷயத்தை சொல்லியிருக்கிறேன்” என்றார் சசி.
தன்னிடமும் தனது படங்களிலும் உள்ள குறைகளை கூட ஒப்புக்கொள்ளும் சசியை பாராட்டித்தான் ஆகவேண்டும்.