“எங்க அப்பா பண்ணின தப்பை நான் பண்ணமாட்டேன்” ; வாரிசு நடிகர் தடாலடி பேச்சு..!


கடந்த இருபது வருடங்களுக்கு முன் நடந்த சினிமா நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நவரச நாயகன் நடிகர் கார்த்திக் பற்றி மனதில் உருவாகியுள்ள பிம்பம் என்னவென்றால், அவர் சொன்னபடி சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வரமாட்டார்.. அவரால் பல படங்கள் நின்று போயிருக்கின்றன. பல படங்கள் தாமதமாக ரிலீசாகி அதனாலேயே பிளாப் ஆன வரலாறும் உண்டு என்பதாகத்தான் இருக்கும்.

இப்போது அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் நடிக்க வந்துவிட்டார்.. ஆனால் அவருடைய செயல்பாடுகளும் அவர் தந்தையைப்போல இருப்பதாகவே செய்திகள் அடிபடுகின்றன. சமீப காலங்களில் வாரிசு நடிகர்களில் மிக பெரிய அளவில் அறிமுகம் கிடைத்தது கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கிற்காகத்தான் இருக்கும்.

மணிரத்னம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அந்தப்படம் சரியாக போகாவிட்டாலும் கூட, கௌதமிற்கு நிறைய வாய்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் உருவாகின.. ஆனால் அவரோ இந்த ஐந்து வருடங்களில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதனால் தனது திரையுலக வாழ்க்கையை பற்றி கவலைப்படாதவர் போல ஏனோ தானாவென்றே படங்களில் நடித்து வருகிறார் என்றே பலரும் பேசுகிறார்கள்…

ஆனால் தான் அப்படி இல்லை என தான் நடித்துள்ள ‘இவன் தந்திரன்’ ஆடியோ வெளியீட்டு விழா மேடையிலேயே பகிரங்கமாக பேசியுள்ளார் கௌதம் கார்த்திக். எனது தந்தை கார்த்திக் ஒழுங்காக ஷூட்டிங் வரமாட்டார்’ என சம்பாதித்த அவப்பெயரை தான் நிச்சயம் சம்பாதிக்கமாட்டேன் என ஓங்கிய குரலில் சொன்னார் கௌதம் கார்த்திக்..

அதை உறுதி செய்வதுபோல அவர் நடித்து தற்போது வெளியாகியுள்ள ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும், இவன் தந்திரன் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணனும் கௌதம் கார்த்திக்கின் அர்ப்பணிப்பு உணர்வு பற்றி நற்சான்றிதழ் கொடுத்து பேசினார்கள்..

குறிப்பாக அதிகாலையில் முதல் ஆளாக சைக்கிள், பைக், கார் என ஏதோ ஒன்றின் மூலம் ஷூட்டிங் வந்துவிடும் கௌதம் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதியாகத்தான் கிளம்பி செல்வார் என இரண்டு இயக்குநர்களுமே கூறியதை பார்க்கும்போது கௌதம் கார்த்திக் சரியான பாதைக்கு திரும்பி விட்டார் என்றே தோன்றுகிறது.