“நான் நடிப்பதையே விட்டுடுறேன்” ; பத்திரிகையாளர்கள் முன்பு சபதம் போட்ட நடிகர்


யாருடா மகேஷ் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி மாநகரம், மாயவன் என்று மிகவும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடித்து வருபவர் சந்தீப் கிஷன். மாயவன் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், தற்பொழுது கார்த்திக் ராஜு இயக்கத்தில் வெளியாகவுள்ள கண்ணாடி படத்தில் நடித்திருக்கிறார். கண்ணாடி படத்தின் தெலுங்கு பதிப்பை சந்தீப் கிஷன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சந்தீப் கிஷன், “டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. ரசிகர்களுக்காக தான் நடிக்கிறேன். ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.

சினிமவில் சாதிக்கவேண்டும் என்பதற்காக, என்னுடன் என் குடும்பத்தார்களையும் கஷ்டப்படுத்துகிறோமோ என்று கூடத் தோன்றுகிறது. இன்னும் என் அம்மாவிற்கு நான் ஒரு புடவை கூட வாங்கிக் கொடுத்ததில்லை… இப்படத்தின் இயக்குநர் கார்த்திக்கும், கம்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் பணியாற்றிக் கொண்டு வசதியாக வாழ்ந்தவர்… ஆனால், இயக்குநராக ஆன பிறகு கடந்த 8 வருடங்களாகத் தனது மனைவி இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்…

மாயவனின் சென்சார் காப்பியை தெலுங்கில் வெளியிட்டு நஷ்டமடைந்த ஒருவர், சந்தீப்பை வைத்து படம் தயாரிப்பதற்கு ஒரு நாயை வைத்துக் கூட தயாரிக்கலாம் என்று சொல்கிறார்… ஏனென்றால் நாயை வைத்து இல்லாவிட்டால் பேயை வைத்து எடுக்கும் படங்கள் ஓடுவதாக இங்கொரு நம்பிக்கை நிலவுகிறது.

கண்ணாடி, பேய்ப்படம் அல்ல, இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். மேலும், 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும். படம் பார்த்தவர்கள் இது பேய் படம் என்று கூற மாட்டார்கள். அப்படி யாராவது கூறிவிட்டால் நான் நடிப்பதையே விட்டுவிடுகிறேன்…” என்றார்.

இதுவரை 24 படங்களில் சந்தீப் கிஷன், யாருடா மகேஷ் இரண்டாம் பாகத்தில் பெரிய சம்பளம் தருகிறோம் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது அதனை மறுத்திருக்கிறார். வழக்கமான படங்களோ அல்லது ஏற்கனவே நடித்த படங்களின் தொடர்ச்சிகளிலோ நடிக்க விருப்பமில்லாதவராக, புதிய புதிய கதைக்களங்களைத் தேடிக் கொண்டிருக்கும் சந்தீப் கிஷன் நடிப்பில் நரகாசுரன் மற்றும் கசடதபற ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

சந்தீப் கிஷனின் தங்கையின் வகுப்புத்தோழர் கோ ஷேஷா பாடல்கள் எழுத இசையமைகிறார் எஸ் தமன்.

கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பாலிவுட் நடிகை அன்யா சிங் நாயகியாக நடித்திருக்கும் இந்தப்படத்தைத் தமிழில் விஜி சுப்ரமணியம் தயாரிக்கிறார்.