முதலில் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்துவிடலாம்..
2008-ம் ஆண்டு குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக முடியாத சூழல். இத்தனைக்கும் ரஜினி தமிழர்களுக்காக, தமிழ் விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆவேசமாகப் பேசப் போய், சிக்கலுக்குள்ளானார். ஆனால் அன்று எந்த தமிழ் நடிகரும், தலைவரும் ரஜினியின் பிரச்சினைக்கு உதவ முன்வரவில்லை.
அதன்பின் ரஜினி தனது பேச்சுக்கு கன்னடர்களிடம் வருத்தம் தெரிவிக்க பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.. ரஜினியின் இந்த செயலுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு விமர்சனங்கள் எழுந்தாலும் தன்னை புரட்சித்தமிழன் என அழைத்துக்கொள்ளும் சத்யராஜ் ரஜினியை பார்த்து அன்று சொன்னதுதான் ஹைலைட்.
“ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார். என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்..”
இப்போது நடப்பு நிகழ்வுக்கு வருவோம்….
பாகுபலி 2 படம் கர்நாடகத்தில் பிரச்சினையின்றி ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, கன்னட அமைப்புகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார் சத்யராஜ். அவர் மன்னிப்பு என்பது போல அல்லாமல், வருத்தம் ங்கிற பெயரில் சுத்தி வளைத்து எந்த வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி இருந்தாலும், அவரை பொறுத்தவரை கன்னடர்களின் நிபந்தனைக்கு அடி பணிந்து விட்டார் என்பதுதான் உண்மை..
தமிழர்களுக்காக, தனது சொந்த மண்ணை சேர்ந்தவர்களை எதிர்த்து குரல் கொடுத்து, அதனால் சிக்கலை சந்தித்து, ஒரு தமிழ் தயாரிப்பாளர் நட்டமடைந்துவிட கூடாது என்பதற்காக அன்று இறங்கி வந்து தனது சொந்த மக்களிடம் வருத்தம் தெரிவித்தார் ரஜினி..
ஆனால் அன்று அவரை விமர்சித்த சத்யராஜோ, ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் நட்டமடைந்து விடக்கூடாது என்பதற்காக கன்னடர்களிடம் ஒரு தமிழனாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு வந்தால் தக்காளி சட்னி.. சத்யராஜூக்கு வந்தால் மட்டும் ரத்தமாம்..
சத்யராஜ் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்ததில் கூட தவறில்லை. ஆனால் தனக்கும் இப்படி ஒரு இக்கட்டான சூழல் வரும் என்பதை அன்று உணராமல் போன சத்யராஜின் நாக்கு, இன்று தனக்கென வரும்போது இன்று எப்படி வளைந்து கொடுத்து வார்த்தைகளை வெளியிட்டுள்ளது பார்த்தீர்களா என சமூக வலைதளத்தில் சத்யராஜை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.