பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகம் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
கடந்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது. இதனால், படக்குழுவினரிடையே பிரச்சினை, தயாரிப்பு நிறுவனத்தில் பணமில்லை என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக பிப்ரவரி 11-ம் தேதி மீண்டும் சென்னையில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமலுக்கு வில்லனாக அக்ஷய்குமார், அஜய் தேவ்கான், அபிஷேக் பச்சன் என பல்வேறு பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், படக்குழுவினர் இதுவரை யாரையுமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பொதுவாக ஷங்கர் படம் என்றால் படம் வெளியாக தாமதமாவது சகஜம். ஆனால் இந்த படம் கமல் ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் எடுக்கப்படுவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் வேகமாக பணிகள் நடக்கும் என தெரிகிறது. ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆக வாய்ப்புள்ளதால் கமல் படம் வெளியிடுவது வேகப்படுத்தப்படும் என தெரிகிறது