இயக்குனர் சுதா கொங்கரா தனது முதல் படமான ‘துரோகி’யை வெளியிட்டபோது பரவாயில்லையே ஆக்சன் லைனில் படம் எடுத்திருக்கிறாரே என நினைக்க வைத்தாலும் அதை உருப்படியாக செய்யாமல் விட்டுவிட்டாரே என்கிற வருத்தத்தையும் ஏற்படுத்த தவறவில்லை.. ஆனால் இந்த முறை ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் சினிமா குறித்த தெளிவான பாதையை அவர் கண்டுகொண்டார் என்பது படம் முழுவதும் தெளிவாக தெரிகிறது.
பாக்ஸிங்கிற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கோச், அடித்தட்டு மக்களான மீனவ குடும்பத்தில் இருந்து பாக்ஸிங் வீராங்கனையை கண்டறிந்து உலக சாம்பியன் ஆக்குவதுதான் கதை.. இதற்குள் விளையாட்டில் நுழைந்துள்ள கேவலமான அரசியலை இரண்டு மணிநேரமும் கண்களை இமைக்கவிடாமல், அதே சமயம் சுவாரஸ்யத்துடன் சொல்லி நம்மை கட்டிப்போட்டு இருப்பதில் ஜெயித்துவிடுகிறார் சுதா கொங்கரா.
இந்த இரண்டு மூன்று வருட இடைவெளியில் சினிமாவை விட்டு பாக்ஸிங் கோச்சாக பணியாற்ற போய்விட்டாரோ என நினைக்கும் அளவுக்கு தனது ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் மாதவன். அவருக்கு ஈடு கொடுக்கும் விதமாக பாக்ஸிங் வீராங்கனையாக வரும் ரித்திகா சிங் நிஜமாகவே பாக்ஸர். ஆனால் பாக்ஸிங்கில் மட்டுமல்ல நடிப்பிலும் அவரிடம் ‘ஆடுகளம்’ தனுஷின் ‘யாத்தே யாத்தே’ துள்ளல் கொப்பளிக்கிறது.
அமைதியாக வந்து, மாதவனின் மாமனார் என தெரியவரும்போது ‘அட’ என்று சொல்லவைக்கிறார் ராதாரவி. லோகல் ஜூனியர் கோச்சாக அசட்டு பிசட்டுத்தனமாக பேசும் நாசரும் நம்மை கவர்கிறார். மும்பைவாலா என்றாலும் கூட குள்ளநரித்தனம் காட்டி விளையாட்டில் பாலிட்டிக்ஸ் பண்ணும் அதிகாரியான ஜாகீர் உசேன் மிகச்சரியான தேர்வு.. மகள்களை கரித்துக்கொட்டி, மதம்மாறி அல்டாப் பண்ணும் காளி வெங்கட் வரும் காட்சிகள் எல்லாம் செம அலப்பறை.. தங்கையாக இருந்தாலும் விளையாட்டு என வரும்போது பொறாமை தலைதூக்கும் அக்காவாக மும்தாஜ் சர்க்கார் பளிச்சிடுகிறார்.
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இரு தண்டவாளங்கள் மாதிரி சரியான இடைவெளியில் பயணிக்கின்றன. நகரெங்கும் பாக்ஸிங் தான் நடக்கிறதோ, அதற்குத்தான் அனைவரும் ஆயுத்தம் ஆகின்றார்களோ என நினைக்க வைக்கும்படியான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார் சுகுமார் விஜயன்.
இடைவேளை வரை காமாசோமாவென கதையை நகர்த்தாமல், ஆரம்ப வினாடியில் இருந்தே கதைசொல்ல ஆரம்பித்து விடுகிறார் சுதா. அதுமட்டுமல்ல கதையை மீறி தேவையில்லாத கட்சிகள் எதையும் வலிந்து திணிக்காத, கதையின் பாதையிலேயே பயணப்பட்டுள்ள சுதாவின் நேர்மையை பாராட்டியே ஆகவேண்டும்.. படத்தின் திரைக்கதை எனும் தூண்களுக்கு மேல் உறுதியான சிமென்ட் பூச்சாக வசனங்களில் பின்னியிருக்கிறார் வசனகர்த்தா அருண் மதீஸ்வரன்.
இது குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.. இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம்.. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஒருமுறைக்கு இருமுறை தாராளமாக பார்க்க கூடிய படம்.. அதைத்தான் கிளைமாக்ஸில் எழும் ரசிகர்களின் கைதட்டல் சொல்லாமல் சொல்கிறது.
கிளிஷே சினிமாக்களை எடுக்கும் பெண் இயக்குனர்கள் தயவுசெய்து ஒரு முறை இந்தப்படத்தை பார்த்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகுங்கள்.