இங்கே இல்லாத இடமா..? ; அஜித் படக்குழுவிற்கு ஆர்.கே.செல்வமணி கேள்வி..!


சிவா டைரக்சனில் அஜித் நடித்துவரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் சென்னை போன்று செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இங்கே படப்பிடிப்பு நடத்த இடமே இல்லையா என தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு படமும் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும் போது எங்களது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை சென்னையில் படமாக்கிய போது, ரூ.12 கோடி மதிப்பில் செட்டில் ஷூட் செய்த போது கிட்டத்தட்ட 10 ஆயிம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். இது சினிமாக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களுக்கே 6 மாதத்திற்கான வேலைவாய்ப்பை காலா படம் உருவாக்கிக்கொடுத்தது.

இப்படியிருக்கும் போது, விசுவாசம் படம் இவிபியில் நடக்கிறது. முன்பெல்லாம், வெளியிடங்களில் நடப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. சில பேரது வசதிக்காக வேறு மாநிலங்களில் செட் போட்டுள்ளார்கள். அதை நம் மாநிலத்திலேயே செய்யலாமே. இதனால், இங்குள்ள தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக நான் இங்கேயே படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. இங்கு இல்லாத விஷயங்களுக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்வதை ஒன்றும் சொல்லவில்லை. ஒரு அறையில், குறிப்பிட்ட இடத்தில் செட் அமைத்து சென்னை, திருநெல்வேலி மாதிரி இடத்தை ஹைதராபாத்தில் உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தான் எனது வேண்டுகோள். இனிமேல் இப்படி செய்து, நம் மாநிலத்திலுள்ள தொழிலாளர்களை அழித்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் ஆர்.கே.செல்வமணி