தியேட்டர் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏற்கனவே தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் பேரை டிவி சீரியல், நிகழ்ச்சிகள் வரவிடாமல் கட்டிப்போட்டு விடுகின்றனர்.. இப்பொது கமலும் கூட அந்த வேலையை செய்வதுதான் வேதனை அளிக்கிறது என ‘உறுதிகொள்’ என்கிற படத்தின் இசைவிழா மேடையில் பகிரங்கமாக பேசியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்..
“தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு.. அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட். நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாஆகும் அவர் யோசிக்க வேண்டும்” என்று பேசி பரபரப்பை கிளப்பினார் மன்சூர் அலிகான்.