தயாரிப்பாளர் சங்க தேர்தல் களைகட்டி வருகிறது.. நான்கைந்து அணிகள் களத்தில் குதிப்பதால் ஒவ்வொருவரின் பிரச்சாரத்திலும் அனல் பறக்கிறது. குறிப்பாக விஷால் அணிப்பக்கம் நட்சத்திர தயாரிப்பாளர்கள் அதிகம் இருபது கலைப்புலி தாணுவையும் அவரது தரப்பினரையும் ரொம்பவே சூடேற்றியுள்ளது.
சமீபத்தில் தனது அணிக்காக பிரச்சாரம் செய்த கலைப்புலி தாணு, விஷாலையும், பிரகாஷ்ராஜையும், ஞானவேல்ராஜாவையும் காட்டமாக விமர்சித்துள்ளார். விஷாலை வைத்து படம் எடுத்த பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர் என்றும் கன்னடத்தில் இருந்துவந்த பிரகாஷ் ராஜ் இங்கே தமிழ் தயாரிப்பாளர்களை பற்றி பேச தகுதியில்லை என்றும் கொந்தளித்தார் கலைப்புலி தாணு..
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவையும் அவர் விட்டுவைக்கவில்லை.. தனது சிங்கம்-3 படத்திற்காக ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி வைத்து அதனால் பல சின்னப்படங்களை சின்னாபின்னப்படுத்தி விட்டார் ஞானவேல்ராஜா என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் கலைப்புலி தாணு..
“சின்னப்படங்கள் எதுவும் ரிலீஸாசாக வேண்டாம் என்றோ, இல்லை ‘சிங்கம்-3’ படம் வெளியானபின்புதான் வெளியாகவேண்டும் என்றோ ஞானவேல்ராஜா உத்தரவு போட்டாரா என்ன..? அவனவன்கிட்ட (சின்ன படங்கள்) சரக்கு சரியா இருந்தா ரிலீஸ் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்கவேண்டியதுதானே.. எங்க படத்தொட்டே ரிலீஸ் தேதியை பார்த்து எதுக்கு தொன்னாந்துக்கிட்டு இருக்கணும்.. இதுகூட தெரியாமல் பேசுறாரே இந்த கலைப்புலி” என எதிர் முகாமில் ஏகடியம் பேசி வருகிறார்களாம்.