பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் நடித்து பாப்புலரான கொல்லங்குடி கருப்பாயி பாட்டிக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வறுமையால் வாடுவதாக செய்திகள் வந்தன. இதனை தொடர்ந்து ஏற்கனவே பரவை முனியாம்மாவுக்கு முதல் ஆளாக உதவியது போல, தனது மன்ற நிர்வாகி மூலமாக குறிப்பிட்ட உதவித்தொகையை வழங்கியுள்ளார் விஷால்.
அதுமட்டுமல்ல, இனி அவரை சங்க உறுப்பினராக்கி மாதாமாதம் பென்சன் வருவதற்கும் ஏற்பாடு செய்ய சொல்லியுள்ளாராம். நல்ல விஷயம் தான். ஆனால் உதவித்தொகை கொடுக்கச்சென்ற நிர்வாகியின் செயல் தான் முகத்தை சுளிக்க வைத்துள்ளது..
அதாவது முதலமைச்சர் சார்பாக இழவு வீட்டிற்கு சென்று உதவித்தொகை வழங்கினால் கூட கூடவே அம்மாவின் புகைப்படத்தையும் சேர்த்தே காண்பிப்பார்கள் இல்லையா..? அதேபோல விஷால் ரசிகர் மன்ற நிர்வாகியும் கொல்லங்குடி கருப்பாயிக்கு உதவித்தொகை கொடுக்கும்போது செய்துள்ளதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தப்பணத்தை விஷால் தான் கொடுத்தனுப்பினார் என தெரியும் விதமாக அருகில் உள்ள லேப்டாப்பில் விஷால் படம் தெரிவது போல வைத்து அதை புகைப்படமாக எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். விஷால் இதுபோன்ற விஷயங்களை ஆரம்பத்திலேயே கவனித்து திருத்திவிட்டால் நல்லது என்கிறார்கள் ஊடகத்தார்கள்.