இது என்ன மாயம் – விமர்சனம்

தன காதலி தன்னை காதலிப்பதற்காக நாடகம் ஆடினாள் என தவறாக நினைத்து பிரிந்துசெல்லும் காதலன், பின்னாளில் நாடகம் ஆடியே அடுத்தவரின் காதலை சேர்த்து வைப்பதை பிசினஸ் ஆக மேற்கொள்கிறான. இந்த நகைமுரணை மையப்படுத்தி ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் படம் தான் இது என்ன மாயம்..

கல்லூரியில் படித்துவிட்டு சும்மா சுற்றும் விக்ரம் பிரபு மற்றும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து காதலை சேர்த்து வைக்கும் பிசினஸை ஆரம்பிக்கிறார்கள். அதாவது காதலியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் காதலனுக்கு, உதவியாக அவர் காதலிக்கும் பெண்ணுக்கு தெரியாமல் செயற்கையாக ட்ராமா ஆடி, அவர்களின் காதலை அவர்களாகவே வெளிப்படுத்த வைப்பதுதான் இந்த டீமின் வேலை..

அவர்களிடம் கோடீஸ்வரரான நவ்தீப், தான் காதலிக்கும் பெண்ணை இம்ப்ரெஸ் செய்து, தனது காதலை தெரிவிக்க வழிசெய்ய சொல்கிறார்.. அவர் காதலிப்பதாக சொன்ன பெண்ணை பார்த்ததுமே ஷாக் ஆகிறார் விக்ரம்பிரபு. காரணம் கேரளாவில் கல்லூரியில் படித்தபோது தான் காதலித்த, சிறிய மனஸ்தாபத்தால் தான் விலக்கிவிட்டு வந்த கீர்த்தி சுரேஷ் தான் அந்தப்பெண்..

இருந்தாலும் தொழில் என வந்துவிட்டதால் ஆரம்பத்தில் கீர்த்தியை நவ்தீப்பின் பக்கம் சாய்வதற்கு சில நாடக தந்திரங்களை மேற்கொள்கிறார் விக்ரம் பிரபு.. ஆனால் போகப்போக கீர்த்தியின் மேல் உள்ள தனது காதல் மறையவில்லை என்பதை உணர்ந்து வேண்டுமென்றே நவ்தீப்பிற்கு தெரியாமல் தனது திட்டங்களை தானே சொதப்புகிறார்.. இறுதியில் நவ்தீப்புக்கு இந்த உண்மை தெரியவர, கீர்த்தி யாருக்கு சொந்தமானார் என்பது க்ளைமாக்ஸ்.


ப்ளஸ்

· ஹாக்கி விளையாட்டில் கிரிக்கெட் முறையை பயன்படுத்தி கோல் அடிக்கும் விக்ரம் பிரபுவின் சாதுர்யம்

· ஆரம்பத்தில் லுத்புதீனின் காதலை விக்ரம் பிரபு & கோ நாடகமாடி சேர்த்துவைக்கும் விதம்

· பச்சரிசி பல் தெரிய சிரிக்கும் கீர்த்தி சுரேசின் அழகு

· சில சமயங்களில் இரண்டு பாலாஜிக்களின் டைமிங் காமெடி

· சார்லியின் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் பர்பாமான்ஸ்

· விக்ரம் பிரபு டீமில் உள்ளவர்களின் அசத்தலான ட்ராமா பர்பாமான்ஸ்

· நவ்தீப்பின் அமைதியான நடிப்பு

· ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மற்றும் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு

மைனஸ்

· முழுப்படத்தையும் காதலை சேர்த்துவைக்க உதவும் டிராமாவாகவே கொண்டு சென்றிருப்பது

· கல்லூரியில் தனது நண்பனுக்காக தூதுபோகும் வேலையை செய்துவிட்டு, அதே வேலையை செய்த கீர்த்தியின் மேல் கோபப்பட்டு விக்ரம் பிரபு தனது காதலை முறித்துக்கொள்வது

· என்னதான் அடிக்கடி பாலாஜி அன் கோ கெட்டப்பை மாற்றினாலும், கீர்த்தி சுரேஷால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை என்று நம்மை நம்பச்சொல்வது

· வளவளவென இழுத்துக்கொண்டே போகும் பின்பாதி

பரவாயில்லை

· பெரிதாக ரியாக்சன்கள் காட்டாத கீர்த்தி சுரேஷின் நடிப்பு

· அப்பாவாக வரும் நாசர், அம்மாவாக வரும் அம்பிகா

· அவ்வப்போது சொதப்பும் விக்ரம் பிரபுவின் திட்டங்கள்

மொத்தத்தில் விருந்துக்கு அழைத்துவிட்டு, பத்திய சாப்பாடு போட்டிருக்கிறார் ஏ.எல்.விஜய்.. அடுத்தமுறையாவது விருந்து போடுங்க சார்..