எல்லோரும் சாப்பிடுறாங்களே.. நாமளும் சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என ஆசைப்பட்டு பீட்சா வாங்கி அதை அனுபவித்து சாப்பிடமுடியாத நிலைதான் ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனுக்கும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.. அதாவது ‘குற்றமே தண்டனை’ படத்தில் இளையராஜாவுடனான அவரது அனுபவம் இப்படித்தான் இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
‘காக்கா முட்டை’யை முடித்த கையோடு அடுத்து குற்றமே தண்டனை’ படத்தையும் இயக்கி முடித்த மணிகண்டன், இந்தமுறை இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றலாம் என முடிவெடுத்து, தனது முதல் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷிடம் இருந்து இவர் பக்கம் தாவினார். தேசிய விருது பெற்ற இயக்குனர் என்பதால் இளையராஜாவும் அவர் படத்துக்கு இசையமைக்க மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார்.
இளையராஜா தன் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது தனக்கு கிடைத்த பொன் முட்டை என நினைத்தார் இந்த காக்கா முட்டை இயக்குனர். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷத்துடன் இளையராஜாவை ஒப்பந்தம் செய்தாரோ அந்த அளவுக்கு இப்போது அவர் நொந்து போய்விட்டதாகத்தான் சொல்லப்படுகிறது.
காரணம் மணிகண்டன் திறமைசாலிதான் என்றாலும் வயதான இளையராஜாவின் ஜீனியஸ் லெவலுக்கு மணிகண்டனால் ஒன்றிணைந்து வேலைபார்க்க முடியவில்லையாம்.. அதனால் பல இடங்களில் தடுமாறி, இளையராஜாவின் ஏளன பார்வைக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது.
அதனால் இந்தமுறை மீண்டும் தனக்கு செட்டாகிற மாதிரி யூத்தான இசையமைப்பாளரான ‘கே’வுடன் தனது மூன்றாவது படத்திற்கு கூட்டணி சேர்ந்துவிட்டாராம் மணிகண்டன். ஆனால் படத்துக்குப்படம் வேறுவேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என அவர் விரும்புவதால் தான் தனது ரூட்டை மணிகண்டன் மாற்றிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்..