அரசு இயந்திரத்தை அதிரவைத்த கமலின் எண்ணூர் விசிட்..!


சினிமாவில் இருப்பவர்கள் யாராவது அரசியல்வாதிகளையோ அல்லது அரசாங்கத்தையோ குறைசொல்லி விமர்சித்து பேசினால், எதிர்தரப்பில் இருந்து முதலாவதாக வரும் பதிலடி என்ன தெரியுமா..? “சும்மா பேசக்கூடாது.. களத்தில் இறங்கி வேலை செஞ்சுட்டு அப்புறம் பேசணும்” என்பதுதான்.. இது அனைத்து அரசியல்வாதிகள், குறிப்பாக ஆளும் கட்சிக்காரர்கள் பயன்படுத்தும் வாக்கியம்..

நடிகர் கமல் கடந்த பத்து மாதங்களாகவே தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை சொல்லிறுகிறார். அவருக்கும் இதே பதில் தான் கிடைத்து வந்தது.. இதோ இப்போது அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே களத்தில் இறங்கிவிட்டார் கமல். ஆம். பருவமழை துவங்கியுள்ள நிலையில் எண்ணூர், கொசஸ்தலை கழிமுகத்தில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள், மற்றும் ஆக்கிரமிப்புகளை ஆகற்றாவிட்டால் வட சென்னை வெள்ளக்காடாகும் என முதலில் கமல் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆமா, இவர் வழக்கம்போல இப்படித்தான் ஏதாவது சொல்வாரு என ஆளுங்கட்சியும் அரசு எந்திரமும் அசட்டையாக இருக்க, வெறும் வாய் வார்த்தையோடு நின்று விடாமல் மறுநாள் அதிகாலையிலேயே எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் பார்வையிட்டார் கமல்.

சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அந்தப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தற்போது மீடியாக்களின் பார்வையும் அந்த பகுதியை நோக்கி திரும்பியுள்ளது. அதனால் வேறுவழியின்றி எந்திரமும் அந்தப்பகுதியில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து இதுபோன்று பல பிரச்னைகளை கமல் கையிலெடுத்து ஆய்வு மேற்கொள்வார் என தெரிகிறது.