கங்காரு – விமர்சனம்

உறவு என்று சொல்லிக்கொள்ள ஒரேயொரு தங்கை மட்டுமே உள்ள அண்ணன், அவள் மீது அதீத பாசம் செலுத்துவதால் ஏற்படும் விபரீதம் தான் ‘கங்காரு’ படத்தின் கதை.

சின்னவயதில் கைக்குழந்தையான தனது தங்கை பிரியங்காவுடன் கொடைக்கானலில் உள்ள தம்பி ராமையாவிடம் அடைக்கலமாகிறார் அர்ஜுனா.. வளர்ந்து வாலிபன் ஆனபின் எந்நேரமும் உர்ரென்ற முகத்துடன் முரட்டுத்தனம் காட்டினாலும் தங்கைக்கு ஒன்று என்றால் துடித்துப்போய்விடுவார். இவர்கள் இருவர் மீது எஸ்டேட் ஓனர் ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் பக்கத்து வீட்டு வர்ஷா ஆகியோரும் அன்பு செலுத்துகின்றனர்.

தன் தங்கை தன்னைவிட்டு பிரியாமல் இருக்கவேண்டும் என நினைக்கு நேரத்தில், தங்கையோ ஒருவரை காதலிக்கிறார். அர்ஜுனா முரடன் தான் என்றாலும் தன் தங்கை விரும்பியவனையே அவளுக்கு மணம் பேசி நிச்சயிக்கிறார்.. ஆனால் திருமணத்திற்கு முன்பே காதலன் மலைச்சரிவில் விழுந்து மரணிக்கிறார். சில நாட்கள் கழித்து இன்னொரு மாப்பிள்ளையை பார்த்து பேசிவைக்க, அவரும் திருமணத்திற்கு முன்பே கரண்ட் ஷாக்கில் கருகி இறக்கிறார்.

இவர்கள் சோகத்தை குறைக்க இவர்களை தனது ஊருக்கு இடமாற்றம் செய்யும் ஆர்.சுந்தர்ராஜன், அங்கே ஏற்கனவே திருமணமாகி, மனைவியை இழந்த நல்ல பையனான சுரேஷ் காமாட்சியை பிரியங்காவுக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் அவரையும் கொல்ல சதி நடந்து அதில் அவர் மயிரிழையில் தப்பிக்கிறார்.

பிரியங்காவின் வாழ்க்கையை சிதைக்க முயலும் அந்த மிருகம் யார் என போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமி வலைவீசி தேட, குற்றவாளி இன்னார் என தெரியவரும்போது நமக்கு அதிர்ச்சியே பதிலாக கிடைக்கிறது. அதற்கான பின்னணியும் அதிர வைக்கிறது.

எங்கோ ஒருத்தரின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வினோதமான நிகழ்வுகள் நடந்துகொண்டுதானே இருக்கிறது. இங்கே கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜுனா கதாபாத்திரத்திற்கும் அப்படி நடப்பதுபோல சித்தரித்திருக்கிறார் இயக்குனர். இந்தப்படத்தில் எந்தவித குறையும் சொல்ல முடியாதது புதுமுகம் அர்ஜுனாவின் நடிப்பு தான்.. தனது பாத்திரத்திற்கு ஏற்றபடி அந்த முரட்டு தோற்றமும், கோபமுமாக இயக்குனர் சாமி சொல்லிக்கொடுத்தபடி இன்னொரு ‘மிருமாக’வே மாறியுள்ளார்.

பாசமலர் தங்கையாக ரொம்பவே வெயிட்டான ரோலை எளிதாக சுமந்து அசத்துகிறார் பிரியங்கா.. தன்னை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத, முரடனை காதலிக்கும் பெண்களுக்கா நம்ம சினிமாவில் பஞ்சம்..? அதைத்தான் கதாநாயகி வர்ஷா அஸ்வதி கொஞ்சம் கிளுகிளுப்பாக பண்ணியுள்ளார்.

தம்பி ராமையா, ஆர்.சுந்தர்ராஜன் இருவரும் தான் படத்தின் முக்கிய தூண்கள்.. இருவருமே கதையுடன் சேர்ந்து பயணிப்பது படத்திற்கு பிளஸ்.. காமெடி கலந்த வில்லனாக நடித்துள்ள கலாபவன் மணி, பேண்ட் அவிழ்ந்து விழும் காட்சியில் நடிக்க சம்மதித்ததே அவரது ஈடுபாட்டுக்கு ஒரு சாம்பிள்.. கஞ்சா கருப்பு வந்து போவதோடு சரி.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், இயக்குனர் சாமியும் தங்களது ஆத்ம திருப்திக்காக அளவான கேரக்டர்களில் தங்கள் திருமுகத்தையும் காட்டியுள்ளார்கள்.

இந்தப்படத்தில் பாடகர் ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளராக மாறியுள்ளார். ஆரம்பத்தில் இடம்பெறும் ‘அம்மா’ பாடல் முதல், பேய்ஞ்சாக்கா மழைத்துளியோ’ மற்றும் ‘தாயும் கொஞ்ச காலம்’ என மூன்று பாடல்கள் வசீகரிக்கின்றன. கொடைக்கானலின் மிடில் கிளாஸ் அழகை ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம் யதார்த்தமாக பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதை என்னவோ முப்பது வருடங்களுக்கு முன்னரே டி.ராஜேந்தர் அடிக்கடி கையாண்டது தான். ஆனால் அப்படிப்பட்ட அண்ணன், தங்கை கதையில் அறிவியல் ரீதியாக சில அதிர்ச்சியான உண்மைகளை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சாமி.. கதாபாத்திர படைப்பில் ஒரு புதிய முயற்சியை பரிசோதித்து பார்த்திருக்கிறார். அவரது முந்தைய படங்களின் சாயல் துளி கூட இதில் இல்லை..படம் போரடிக்கவும் இல்லை.. த்ரில்லுக்கும் பஞ்சமில்லை.