தமிழை சேர்ந்த சினிமா பிரபலங்கள் யாரும் தங்களது ஜாதி பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்டதாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. பெரும்பாலும் கேராளாவில் இருந்து வரும் நபர்கள் தான் தங்களது பெயருடன் தங்களது ஜாதிப்பெயரான நாயரையோ, மேனனனையோ இணைத்துக்கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில் மரியான் பார்வதியை பாராட்டவேண்டும். முதலில் பார்வதி மேனன் என்கிற பெயரில் அறிமுகமானாலும் நாளடைவில் ஜாதி தேவையில்லை என்பதை புரிந்துகொண்டு தன்னை வெறும் ‘பார்வதி’ என்றே அழைத்தால், குறிப்பிட்டால் போதும் என சொல்லிவிட்டார்.
இப்போது ‘உறுமீன் படத்தில் நடித்துள்ள ரேஷ்மி மேனன் சமீபத்தில் நடைபெற்ற அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் கரு.பழனியப்பனால் ஜாதிப்பெயரை நீக்குமாறு அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறார்.
ஆனால் கரு.பழனியப்பன் சொன்னது ரேஷ்மிக்கு மட்டும் தானா..? அல்லது நடிகைகளுக்கு மட்டும் தானா..? பத்து வருடங்களுக்கு முன் தமிழில் ‘மின்னலே’ படம் மூலம் கௌதம் என்கிற பெயருடன் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் மேனன். இது தமிழில் நுழைவதற்காக அவர் அடக்கி வாசித்தது.
அந்தப்படம் ஹிட்டாகவே, ‘காக்க காக்க’வில் கௌதம் மேனன் என பெயர் போட்டார். தொடர்ந்து வந்த படங்களில் கௌதம் வாசுதேவ் மேனன் என பெயரை நீட்டினார்.. பெயரை நீட்டினாலும் ஜாதிப்பெயரை இன்றுவரை முறிக்கவில்லை.. அதாவது தமிழ் சினிமாவில் ஒரு மலையாளியாக தான் கோலோச்சுவதை பறைசாற்ற விரும்புகிறார் என்றே நினைக்க தோன்றுகிறது. சரி.. கரு.பழனியப்பன் சொன்ன அட்வைஸ் கௌதம் மேனனுக்கும் சொல்லப்பட்டதாய் எடுத்துக்கொள்வோமே..