இடைத்தேர்தலால் தனுஷ் படத்திற்கு தேடிவந்த சிக்கல்..!


‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்குப்பின் தனுஷ் நடித்த படங்கள் வரிசையாக மண்ணை கவ்வி வந்த நிலையில் இந்த தீபாவளிக்கு வெளியான கோடி படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நன்றாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது. அரசியல் படம் என்பதால் படத்திற்கு எதிர்பாராத குறுக்கீடுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது..

ஆனால் நல்லவேளையாக படம் ரிலீசாகவும், தியேட்டர்களில் ஓடும்போதும் எந்த பிரச்சனைகளும் இல்லை. வரிவிலக்கு கூட கிடைத்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால் இப்போது இந்தப்படத்திற்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலால் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

கொடி படத்திற்கு, தேர்தல் நடைபெற உள்ள, தஞ்சாவூர், கரூர், மதுரை மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில், கேளிக்கை வரியில் இருந்து விலக்களித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில், கொடி படத்தை திரையிடுவதன் மூலம், வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை, அரசுக்கு செலுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது