விஷாலின் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்ட லைகா


திரையுலகில் கடந்த ஒன்றரை மாதமாக நிலவி வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால், அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸாவதற்கு வரிசைகட்டி நிற்கின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று கார்த்திக் சுப்பராஜ்-பிரபுதேவா கூட்டணியில் உருவான மெர்க்குரி படம் வெளியானது. அதை தொடர்ந்து வரும் ஏப்-27ஆம் தேதி அரவிந்த்சாமி-அமலாபால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல், விக்ரம்பிரபு-பிந்துமாதவி-நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘பக்கா’ மற்றும் விஜய் டைரக்சனில் சாய்பல்லவி நடித்துள்ள ‘தியா’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

அந்தவகையில் துப்பறிவாளன் படத்தையடுத்து விஷால் நடித்து, ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் இரும்புத்திரை. விஷால் ஜோடியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கி உள்ளார். விஷாலே தயாரித்துள்ளார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கனவே இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப்போனது.

இதற்கிடையில் தமிழ் திரையுலகில் ஸ்டிரைக் வேறு நடந்தது. தற்போது ஸ்டிரைக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் இந்தப்படத்தின் இசை வெளியீடும், மே 11-ல் படமும் ரிலீஸாகும் என போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த செய்தியை விஷால் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது இரும்புத்திரை படம் மே 11-ல் ரிலீஸாகாது. படத்தை வாங்கியவர்கள், விஷால் பிலிம் பேக்டரியின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக\ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ரிலீஸ் குழுவின் ஒப்புதல்படி ரிலீஸ் தேதி முறையாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் விஷால்.. அனேகமாக இனி வேறு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றே தெரிகிறது.