தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்டவர்களே, மீண்டும் மீண்டும் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக அதே கொடுமையே நடந்து கொண்டிருக்கிறது. சாட்டிலைட் உரிமை, எப்எம்எஸ் உரிமை ஆகியவை 350, 400 படங்களுக்கு மேல் விற்கப்படாமலே இருக்கிறது. அதை யாரும் கண்டு கொள்வதேயில்லை…அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை…திரைப்படங்களின் பைரசி அன்றே விற்கப்படுகிறது. அதை அவர்கள் தடுப்பதேயில்லை.
அதனால், இதுவரைக்கும் தேர்தலில் போட்டியிடாதவர்களை வைத்துக் கொண்டு நான் போட்டியிட உள்ளேன். என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் திருட்டி சிடி விற்பதைத் தடுத்து விடுவேன். பேருந்துகளில் எல்லாம் கூட படங்களைப் போடுகிறார்கள். அப்படி போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன், எப்படி கவனிக்க வேண்டுமோ, அப்படி கவனிப்பேன். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் போஸ்டர் அடித்து ஒட்டுவேன், புதுப்படம் போட்டால் தெரியப்படுத்துங்கள் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பேன். எங்க சொத்தைக் காப்பாத்த வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கேன். என் கூடப் போராட நினைக்கிறவங்க என் பின்னாடி வாங்க, அதுக்காக ஜெயிலுக்குப் போக நான் தயங்க மாட்டேன்.
சின்னச் சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கோம். எங்களோட அணி பேரு புதியவர்கள் அணி. 24 மணி நேரமும் சங்கத்துக்காக உழைக்க நினைக்கிற ஆட்கள் என் பின்னாடி வாங்க. கால் மேல கால் போட்டு தூங்கற ஆள் எனக்கு வேணாம். நலிந்த தயாரிப்பாளர்களுக்காக பல திட்டங்களை வச்சிருக்கேன். டாப் ஹீரோவ வச்சி படம் எடுத்து அதுல வர்ற லாபத்தை வச்சி ஒரு 100 தயாரிப்பாளர்களுக்கு உதவலாம். வெளிநாட்டுல கலை நிகழ்ச்சி நடத்தலாம். இன்னும் பல திட்டங்களை வச்சிருக்கேன்.
இருக்கிற பிரச்சனைய தீருங்கன்னு சொன்னால் யாரும் கேக்கறதில்லை. இவங்க ஜெயிச்சி வந்தால் அவங்க கோர்ட்டுக்குப் போவாங்க, அவங்க ஜெயிச்சி வந்தால் இவங்க கோர்ட்டுக்குப் போவாங்க. தமிழ் நாட்டுல தொடப்பம் விக்கிறவன் சங்கம் வச்சிருக்கான், காகிதம் பொறுக்கிறவன் சங்கம் வச்சிருக்கிறான், அவன்லாம் நாணயமா நல்ல விதமா நடத்தறான்.
ஆனால், தமிழ்நாட்டுல இருக்கிற பெரிய சங்கமா இருக்கிற, 28 கிராஃப்ட்டுக்கு வேலை கொடுக்கிற தாய் சங்கமா தயாரிப்பாளர் சங்கம், ரோட்டுல விக்கிற திருட்டு விசிடியை ஒழிக்க முடியாத ஒரு சங்கமா இருக்கு.
ஒரு கோழி வந்து அனோட குஞ்சுகளைப் பாதுகாக்கறதுக்கு பருந்தை அடிச்சித் துரத்துது, அப்படின்னா என்னோட படத்தோட திருட்டு விசிடிய விக்கிறான்னா அவனை அடிக்கிறதுலயும், உதைக்கிறதுலயும் என்ன தப்பு இருக்கு. என் சொத்தை நான் பாதுகாக்கணும், நான் பதவிக்கு வந்தால் அடுத்த நாளே பைரசி ஒழிக்கப்படும். அதுக்காக ஜெயிலுக்குப் போகவும் தயாரா இருக்கேன். என் உழைப்பை மத்தவன் சுரண்டறதுக்கு விட மாட்டேன். ஆதரிக்கிறவங்க ஓட்டுப் போடுங்க…இதான் என் தாரக மந்திரம்.