பொதுவாக மக்கள் மத்தியில் பாப்புலராக வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இரண்டுவிதமான ஆசைகள் துளிர்விடும்.. ஒன்று அரசியல்.. இன்னொன்று ரஜினி வைத்துள்ள ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம். சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்கிய லாரன்ஸுக்கு அரசியல் ஆசை மட்டும் தான் இருக்கிறது என நினைத்தால், தற்போது வெளியான அவரது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர்ஸ்டார்’ என்கிற படத்தை போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கும்போது, இவரும் அந்தபட்டத்திற்கு பேராசைப்படுகிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது..
அதனால் கடந்த மூன்று நாட்களாக அவரை சமூக வலைதளத்தில் வறுத்து எடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.. ஆனால் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் படத்தின் இயக்குனர் சாய்ரமணி தானாம். அவர்தான் கொஞ்சம் ஓவராக உணர்ச்சி வசப்பட்டு ‘மக்கள் சூப்பர்ஸ்டார்’ என்கிற பட்டத்தை கொடுத்தாராம்.
“லாரன்ஸ் மாஸ்டருடன் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பழகி வந்த எனக்கு அவரின் மேல் உள்ள அன்பின் அடிப்படையிலும், மக்களுக்கு உதவி செய்துவரும் அவர். மேலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் தான் அந்த டைட்டிலை வைத்தேன். இது லாரன்ஸுக்கு கூட தெரியாது” என சப்பைக்கட்டு கட்டியுள்ளார் சாய்ரமணி..
இதில் ஹைலைட் என்னவென்றால் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரை ரஜினி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.. ரஜினியை சந்திக்கப்போகிறோம் என்றால் சந்தோஷத்தில் யாருக்கும் தூக்கம் வராதுதானே.. ஆனால் சாய் ரமணிக்கோ இந்த ‘மக்கள்சூப்பர்ஸ்டார்’ விவகாரத்தில் ரஜினி என்ன சொல்லுவாரோ என்கிற நினைப்பிலேயே பயத்தில் உதறல் எடுக்க ஆரம்பித்ததாம்..
நல்லவேளையாக படத்தையும் இயக்குனரையும் பாராட்டிய ரஜினி அதுபற்றி எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லையாம்.. இருந்தாலும் சாய்ரமணி வாண்டேடாக ரஜினியிடம் தனது செயலுக்கு விளக்கம் கூறி மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.