இளம் நடிகரை பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய மிஷ்கின்..!


பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது உதயநிதியை வைத்து ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.

கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நித்யா மேனன், ராம், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சைக்கோ’ படத்தின் கதை எனக்காக உருவாக்கப்பட்டது. இது மிஷ்கினுக்கே தெரியும். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக பயிற்சி எல்லாம் எடுக்கச் சொன்னார். இவ்வளவு நாள் காக்க வைத்து விட்டு இப்போது அந்தக் கதையை வேறு ஒருத்தருக்காக செய்கிறார். இந்த 3 ஆண்டுகளில் என்னை அணுகிய 4,5 இயக்குநர்களிடம் “மிஷ்கினுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டோம்” என்று கூறி அனுப்பி விட்டேன். என்னை அணுகிய இயக்குநர்கள் படம் எடுத்து முடித்து தற்போது ரிலீஸ் செய்தே விட்டார்கள்.

மிஷ்கின் கூறியதைத்தான் நான் இதுவரை செய்தேன். என் தந்தை மிஷ்கினுக்கு கொடுத்த பணத்தை விட அவரிடம் காட்டிய மரியாதையும் அன்பும் அதிகம். மூன்று ஆண்டுகளாக ஒரு விஷயத்துக்காக காத்திருந்து அது நடக்காது என்று தெரியவரும்போது ஏற்படும் வலி எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆறாது. நீதிமன்றத்தை நாடலாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் உச்சபட்ச நீதிமன்றம் என்பது மிஷ்கினின் மனசாட்சிதான். அந்த மனசாட்சியிடமே இந்த விஷயத்தை ஒப்படைக்கிறேன்” என வேதனையுடன் கூறியுள்ளார் மைத்ரேயா.

‘சவரக்கத்தி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது படத்தின் நாயகன் இவர் தான் என்று மைத்ரேயாவை இயக்குநர் மிஷ்கின் அறிமுகப்படுத்தி வைத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது