விஜயகாந்த் விலகினாரே… நீங்கள் ஏன் விலகவில்லை சரத்குமார்..?” நடுநிலையாளர்கள் கேள்வி..!
இத்தனை வருடங்களாக இல்லாத வகையில் இந்தமுறை நடிகர்சங்கம் பரபரப்பான தேர்தலை சந்திக்கப்போவது உறுதியாகிவிட்டது.. இதில் சங்கத்தினர் இரண்டு அணிகளாக பிரிந்துவிட்டதும் அதில் ஒரு அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவதும் தெரிந்ததுதான். சரத்குமார் அணியில் சரத்குமாரே தலைவர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடுகிறார். இல்லையில்லை முயற்சி செய்கிறார்.. அதுதான் இங்கே கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த நேரத்தில் கடந்த 2௦௦6 ஆம் வருடம் நடந்த நிகழ்வை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா..? விஜயகாந்த் தனியாக அரசியல் கட்சி தொடங்கிய பின்னும் கூட 11 மாதங்கள் நடிகர்சங்க தலைவராகவே நீடித்தார்.. அப்போது அடுத்ததாக அந்த பதவிக்கு வர காத்திருந்த சரத்குமார் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், “அரசியலுக்கு போய்விட்டதால் விஜயகாந்த் பதவி விலகுவதுதான் நல்லது” என வலியுறுத்தி கூறினார்.
இருந்தாலும் இதை விகல்பமாக எடுத்துக்கொள்ளாத விஜயகாந்த் அடுத்த சில மாதங்களில் நடிகர்சங்க தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் அதுவரை செயலாளராக இருந்த சரத்குமார் தலைவர் இடத்திற்கு வந்தார் (அப்போதும் கூட விஜயகாந்த் வந்து மாலை அணிவித்து வாழ்த்திவிட்டு தான் சென்றார்). ஆனால் கொஞ்ச நாளில் அவரும் அரசியல் கட்சி தொடங்கியபோது, விஜயகாந்தை தான் கேட்டது போல, தன்னைப்பார்த்து யாரும் கேட்டு விடக்கூடாது என நடிகர்சங்க தலைவர் பதவியை ராஜினமா செய்தார்.. அதாவது செய்வதாக நடித்தார். அதற்கு அவர் கூறிய காரணத்தை அப்படியே கீழே தருகிறோம்..
“நான் கட்சி தொடங்கிய பின் கட்சி வேலைகள் நிறைய இருக்கின்றன. நடிகர் சங்க வேலையும் உள்ளது. இரண்டு வேலைகளையும் கவனிப்பது சிரமமாக இருக்கிறது. அதனால் தான், நான் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். கமிட்டி உறுப்பினர்களும், நடிகர் சங்க உறுப்பினர்களும் நான் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியில் நீடிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கமிட்டி உறுப்பினர்கள் இதைத் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு வருமானம் வரவேண்டும். எனவே இந்த பணிகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து நீங்கள் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று நான் எனது ராஜினாமாவை வாபஸ் வாங்கி கொள்கிறேன். பதவிக்காலம் முடியும் வரை தலைவர் பதவியில் நீடிப்பேன். அதன்பிறகு நடிகர் சங்க தலைவராக இருக்க முடியாது. நடிகர் சங்க தேர்தலில் அடுத்தமுறை நான் நிச்சயமாக போட்டியிட மாட்டேன்”
இதுதான் 2௦௦6-ல் சரத்குமார் பேசியது. இதிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகவே தெரிகிறது. நடிகர்சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்ட உள்ளதால் தான், தான் ராஜினிமா செய்யவில்லை என்று சொன்ன சரத்குமார், அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட கிட்டத்தட்ட ஆறு வருட காலம் எடுத்துக்கொண்டது ஏன்..? நல்லதோ கெட்டதோ 2௦13ல் தானே எஸ்.பி.ஐ சினிமாஸுடன் ஒப்பந்தம் போடப்பட்டது..
அடுத்ததாக, போனால் போகிறதென்று இந்தமுறை பதவிக்காலம் முடியும் வரை தலைவராக நீடிப்பேன்.. அதன்பிறகு நிச்சயமாக நடிகர்சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொன்ன அதே சரத்குமார் அடுத்ததாக விடாமல் இரண்டுமுறை தலைவராக பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது நான்காவது முறையாகவும் பதவியை தக்கவைக்க துடிக்கிறார்.
அந்த ஆசைக்கு குறுக்காக விஷால் அணி மூக்கை நீட்டியதால் தான் இத்தனை ஆவேசம்.. இப்போதும் அரசியல் கட்சித்தலைவராகத்தானே சரத்குமார் இருக்கிறார். இப்போது மட்டும் கட்சி வேலைகள் இல்லையா என்ன..? அன்று விஜயகாந்தை விலகச்சொன்ன இவர், பத்து வருடங்கள் பதவியை அனுபவித்துவிட்டு, இப்போதும் கூட இறங்கமாட்டேன், இளைஞர்களுக்கு வழிவிடமாட்டேன் என சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என கேட்கிறார்கள் நடிகர்சங்கத்தில் உள்ள நடுநிலையாளர்கள்.
“இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” – திருக்குறள்
அதாவது குறையை சுட்டிக்காட்டுபவர்கள் இல்லாத அரசு தானாகவே கெடும். இதுதான் இதன் அர்த்தம்.. இதுதான் சரத்குமார் விஷயத்தில் இப்போது நடக்கிறது.