அய்யா…. அஜித்தையோ, நயன்தாராவையோ அவர்தான் நடிக்கவேண்டும் என அடம்பிடித்து ஒப்பந்தம் செய்பவர்கள் தயவுசெய்து புலம்புவதை நிறுத்துங்கள். இவர்கள் இருவரும்தான் தங்களது படத்தின் எந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சிக்கும் வரமாட்டார்கள் என்று தெரியுமே, அப்புறம் எதற்கு அவர் எந்த விழாக்களுக்கும் வர மறுக்கிறார், தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என கூப்பாடு போட வேண்டும்..?
நல்ல கதை சொல்கிறீர்களா.. ஒப்புக்கொள்வார்.. கேட்ட சம்பளத்தை கொடுக்கிறீர்களா.. சந்தோஷப்படுவார். அதற்குமேல் அவரை அந்த விழாவுக்கு வாருங்கள், இந்த விழாவுக்கு வாருங்கள் என தயாரிப்பாளர் கூப்பிட்டால், அது அவர்களது அறியாமை.. இல்லை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்றால் அவர்கள் தான் புத்திசாலிகள்..
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இவர் தற்போது நடித்துள்ள மாயா படத்தை தெலுங்கில் வெளியிடும் விநியோகஸ்தர், அந்தப்படத்தை தனியாக அமர்ந்து பார்க்கும் தில் உள்ளவர்களுக்கு ஐந்து லட்சம் பரிசு தருவதாகவும், அதை நயன்தாரா கையாலேயே தருவதாகவும் அறிவித்தார். அவ்வளவுதான் யாரை கேட்டு இப்படி அறிவித்தீர்கள்.. விழாவுக்கெல்லாம் நான் வர முடியாது என கறாராக கூறிவிட்டாராம் நயன்தாரா.
அப்படியென்றால் ஆர்யா தயாரித்த படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கெல்லாம் வந்தார்.. அதில் அவர் நடிக்க கூட இல்லையே என நீங்கள் கேள்வி கேட்டால், அது கேட்பவரின் முட்டாள்தனம். கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வார் இல்லையா “என்னது லட்ச ரூபா கொடுத்தா கூட ஆறுமணிக்கு மேல வேலைக்கு வரமாட்டேனா… 30ரூபா கொடுத்தா நாள் முழுக்க வேலை பார்ப்பண்டா” என்று, அப்படி எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்பு இல்லாமல் ஈ ஓட்டும் ஒரு நிலை வரும்.
அந்த நேரத்தில் யாரும் கூப்பிடாமலேயே விழாக்களுக்கு வருவார் நயன்தாரா. ஆனால் என்ன ஒன்று.. அப்போது காலம் கடந்திருக்கும்.