நயன்தாராவின் அண்டர்கிரவுண்டு அரசியல்..!


நடிகை நயன்தாரா தொடர்பான செய்திகள், வதந்திகள் எல்லாமே சினிமா உலகில் வைரல்தான். அவரது சினிமா மார்க்கெட்டும் இதற்கு ஒரு காரணம்! முன்ணனி நடிகர்களே நயன்தாராவின் கால்ஷீட்டுக்கு தவமிருக்கும் நிலை தற்போது உள்ளது. அதே நேரம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நயன்தாராவும் சில நேரங்களில் அதிரடியாக சினிமாவில் அரசியல் செய்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் நடித்து தான் இன்னும் இளம் நடிகைதான் என்று நிரூபிக்கிற அக்கறை ஒருபுறம் என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க அவர் காட்டும் வேகம் இன்னொரு ரகம். தற்போது முருகதாஸ் – ரஜினி கூட்டணியில் வரப்போகும் படத்தில் இடம் பிடிக்க நயன்தாரா ஆர்வமாகியிருக்கிறார். இதற்காக இயக்குனர் தரப்பை நயன் தரப்பில் அணுகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. நயன் இந்தப் படத்தில் ஆர்வம் காட்ட இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.. அது, ரஜினியின் அரசியல்!

ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், கிட்டத்தட்ட ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம். அதனால் படத்தில் அரசியல் கொஞ்சம் அல்ல, நிறையவே தூக்கலாக இருக்கும். அப்படத்தில் நடிப்பது தனது ‘எதிர்கால அரசியலுக்கு’ சாதகமாக இருக்கும் என நயன்தாரா நினைப்பதாகவும் கூறுகிறார்கள். ரஜினியுடன் இணைந்து நயன்தாரா அரசியல் செய்யலாம் என்கிற பேச்சுகளும் சினிமா வட்டாரத்தில் பலமாக அடிபடுகின்றது. நயன்தாரா ரஜினிக்கு ஜோடியானால் இந்த செய்திகளும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டும்.