அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மாட்டேன் என, இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ் மல்லுக்கட்டுவதற்கு, நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி கொடுத்த தைரியம் தான் காரணம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறதாம்.
விஜய் நடித்த, சர்கார் திரைப்படத்தில், அரசு, மக்களுக்கு கொடுக்கும் இலவசங்களை விமர்சித்ததற்கும், வில்லி கதாபாத்திரத்துக்கு, கோமளவல்லி என பெயர் சூட்டியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஆளுங்கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.படம் ஓடிய தியேட்டர்களில், கலாட்டா செய்தனர். சில திரையரங்குகளில், காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படத்தை இயக்கிய, ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்படும் அளவிற்கு, நெருக்கடியும் ஏற்பட்டது.அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக, முருகதாஸ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.’இனி, அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் காட்சிகள் வைக்க மாட்டேன் என, உத்தரவாதம் தர வேண்டும்’ என்ற கோரிக்கை, அரசு தரப்பில் வைக்கப்பட்டது.
ஆனால், ‘அரசின் நலத் திட்டங்களை விமர்சித்ததற்காக, மன்னிப்பு கேட்க முடியாது. அது, என் கருத்து சுதந்திரம்’ என, முருகதாஸ் மறுத்துள்ளார்.அதன்பின், முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை, மேலும், இரு வாரங்களுக்கு நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மன்னிப்பு கேட்க முடியாது என, முருகதாஸ் துணிச்சலான முடிவை எடுப்பதற்கும், ஆளுங்கட்சிக்கு எதிராக மல்லுக்கட்டுவதற்கும், ரஜினி கொடுத்த தைரியம் தான் காரணம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, ரஜினி வட்டாரம் கூறியதாவது:சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் வைத்த கோரிக்கை குறித்து, ரஜினியிடம் முருகதாஸ் குமுறியுள்ளார். அதாவது, ‘என்னை ஆளுங்கட்சி தரப்பில் மிரட்ட நினைக்கின்றனர். ‘ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர், மன்னிப்பு கேட்க வைக்க துடிக்கிறார்; அது நடக்காது. சமூக நீதிக்காக, நான் தொடர்ந்து போராடுவேன். மக்களை பாதிக்கும் விஷயங்களை, படக் காட்சிகளாக்குவேன்’ என, கூறியுள்ளார்.
அதற்கு ரஜினி, ‘உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. பொறுமையாக முடிவு எடுங்கள். தணிக்கை சான்றிதழ் அளித்த பின், அதில் பிரச்னை ஏற்பட்டு, காட்சிகள் நீக்கப்பட்ட பிறகும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ‘நீங்கள் தைரியமாக இருங்கள். மன்னிப்பு கேட்கக் கூடாது என்ற, முடிவில் உறுதியாக இருங்கள்’ என, தைரியம் கூறியுள்ளார்.
ரஜினியே ஆதரவாக இருப்பதால், நீதிமன்றத்தில், மிக தைரியமாக, மன்னிப்பு கேட்க முடியாது என, அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என வசனம் எழுதிய ஏ.ஆர்.முருகதாஸ் அதையே தனது வாழ்க்கையிலும் கடைபிடிக்க முடிவெடுத்துள்ளாராம்.