கடலில் விழுந்தவர் கண்மணியால் மீண்டு வந்தார் என சொல்லும் விதமாக கடந்த காலங்களில் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த மணிரத்னம் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார் என ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் கூட சொல்லலி வருகிறார்களாம். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பத்திரிகைகளும் சரி.. இணையதள விமர்சகர்களும்.. ஏன்.. பெருவாரியான சமூக வலைதள ரசிகர்களும் கூட படத்தை பாராட்டி வருகிறார்களே தவிர பெரிதாக குறை ஒன்றும் சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தால் திருஷ்டியும் ஏதாவது இருக்கவேண்டுமே…
குற்றவாளிகளின் கைரேகைகள் பொருந்துவதை ஆராய்ச்சி செய்யும் தடயவியல் ஆராய்ச்சியாளர் போல ஒரு படம் வெளியானதும் அதை தங்களது மூலையில் உள்ள ஸ்கேனிங் மிஷினில் ஓட்டிப்பார்த்து, இது எந்தப்படத்தில் இருந்து சுடப்பட்ட கதை, காட்சி, இசை என ஏரியாவாரியாக புட்டுப்புட்டு வைக்கும் பேஸ்புக் நக்கீரர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தற்போது அவர்களின் கழுகு கண்காளால் ஸ்கேனிங் செய்யப்பட்ட ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், 2௦11ல் ஹாலிவுட்டில் வெளியான “பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்” என்கிற படத்தின் சாயல் தெரிவதை கண்டுபிடித்திருக்கிறார்களாம். இரண்டுக்குமான கதைக்களம், மறதி நோய், லிவிங் டுகெதர் வாழ்க்கை என இந்தப்படத்தின் மையக்கரு சின்னச்சின்ன மாற்றங்களுடன் எடுத்தாளப்பட்டிருப்பதாக அவர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இதைகூட சாதாரணமாக விட்டிருப்பார்கள் தான்.. ஆனால் படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்னர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுகாசினி, ‘மௌஸ் பிடித்தவர்கள் எல்லாம் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்” என இப்படி சமூகதளங்களில் விமர்சிப்பவர்களை பற்றி ஏகடியம் பேசினார்.
அதன் தீவிரமான பதிலைத்தான் இந்த நக்கீரர்கள் இப்போது திருப்பி தந்துள்ளார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த சிலர்.. கண்மணி உள்ளூர்க்காரியா..? இல்லை அமெரிக்காவில் இருந்து வந்தவளா என்பதை சுகாசினி தெளிவு படுத்துவாரா..?