வாகன போக்குவரத்தே இல்லாத ஊரில் வசிக்கும் பெரியவர் விஜய்சேதுபதிக்கு நெஞ்சுவலி என போன் வர, ஆம்புலன்ஸ் சர்வீசில் வேலைபார்க்கும் அவசர மருத்துவ உதவியாளர் ரமேஷ் திலக்கும் ஓட்டுனர் ஆறுபாலாவும் அவரது கிராமத்திற்கு செல்கிறார்கள்.. அவரோ நெஞ்சுவலி என்றாலும் திடகாத்திரமாகவும் அடாவடி பேச்சுடனும் இவர்களை வரவேற்கிறார்.
விஜய்சேதுபதி கொடுக்கும் டார்ச்சர்களை எல்லாம் சமாளித்து அவரது ஊரிலிருந்து படாதபாடுபட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். வரும் வழியிலும், வந்தபின்னரும் விஜய்சேதுபதியின் செயல்களால் கடுப்பாகும் ரமேஷ்திலக், இறுதியில் விஜய்சேதுபதியின்பால் எப்படி சினேகமாகிறார் என்பது தான் க்ளைமாக்ஸ்.
குறும்பட கான்செப்ட்டை பெரும்படமாக இழுழுழுத்த்திருக்கிறார்கள். வயதான் கெட்டப்பில் விஜய்சேதுபதி செய்யும் அடாவடியும் எகத்தாளமும் ரசிக்கும்படியாக அதேசமயம் அவருக்குள் இருக்கும் நல்லமனதையும் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால் நடிப்பு நன்றாக இருந்தாலும் கதை (வ்லு)௦ இல்லாமல் இருக்கிறதே சாமி.. அதோடு அந்த மேக்கப்பும் அவருக்கு செட்டாகவில்லை யுவர் ஆனார்.
படத்தின் ஹீரோ என்றால் ரமேஷ் திலக்கைத்தான் சொல்லவேண்டும்.. ஆம்புலன்ஸில் எப்போதும் பயணிக்கும் மருத்துவ உதவியாளர் என்பதால் கோபம் வரும் இடத்தில் கூட சாந்தம் காட்டி பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலியுடனும் அவர் வீட்டிலும் கடைசி வரை தனது சுயமரியாதையை விட்டுகொடுக்காத இடத்தில் அவரது கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.
ட்ரைவராக வரும் ஆறுபாலா ஒரு சாயலில் ‘ஆடுகளம்’ முருகதாசின் ஜெராக்ஸ் காபியாக இருக்கிறார். ஆனால் இவர் எப்போதுமே கத்திக்கத்தி பேசுவது எரிச்சலையே உண்டு பண்ணுகிறது.. ஆம்புலன்ஸ் ட்ரைவர்கள் குறைந்தபட்ச மனித நேயத்துடனும் கொஞ்சம் கண்ணியத்துடன் இருப்பதைத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். இவர் ஆம்புலன்ஸ் ட்ரைவராக இல்லாமல் ஆட்டோ ட்ரைவராக மாறி அடாவடி பண்ணுவது கடுப்படிக்கிறது.
நட்புக்காக ஓரிரு காட்சிகளில் வந்துசெல்லும் கருணாகரன், அசோக் செல்வன் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கதாநாயகியாக வரும் அஷ்ரிதா படபடவென பொரியும் கதாபாத்திரத்தில் நம்மை ஈர்த்தாலும் மனதில் தங்க மறுக்கிறார்.
ஆம்புலன்ஸ் பற்றிய கதையை எடுத்திருக்கிறார்களே தவிர, அதில் கொஞ்சமாவது சீரியஸ்நெஸ் வேண்டாமா..? ஏதோ பிக்னிக் போவது போல ஆம்புலன்சில் போவது கதையோட்டத்துடன் நம்மை ஒட்டாமல் தடுக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் தேவலை.. அடடே.. விஜய்சேதுபதி வசனம் கூட பரவாயில்லாமல் எழுதுகிறாரே.. அறிமுகப்படத்திலேயே, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என மூன்றையும் தன தோள் மீது ஏற்றிக்கொண்டதாலோ என்னவோ கதையை நகர்த்துவதில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் இயக்குனர் பைஜூ விஸ்வநாத்.
மொத்தத்தில் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள் என எதிர்பார்த்து போனால் புளிப்பு மிட்டாயை தந்து அனுப்பிவைக்கிறார்கள்.