இப்போது வந்த நண்டு, சிண்டு நடிகர்கள் எல்லாம் ரெண்டு படம் நடித்ததுமே, சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு டெவலப் ஆகிவிட்டனர். காலம் கடந்தாலும் கூட, இதுதான் சரியான தருணம் என நினைத்தாரோ என்னவோ, நடனப்புயல் பிரபுதேவாவும் இப்போது தயாரிப்பில் இறங்கிவிட்டார்..
ஒன்றல்லா.. ரெண்டல்ல.. ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கும் பிரபுதேவா அதில் ஒன்றை மட்டும், அமலாபாலுடன் இணைந்து தயாரிக்கிறார். அந்தப்படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். மற்ற இரண்டு படங்களில் ஒன்றை ஜெயம் ரவி நடிக்க, ரோமியோ ஜூலியட்டை இயக்கிய லட்சுமணனும், மற்றொன்றை ஐசரி கணேஷின் மகன் வருண் நடிக்க, ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குனர் விக்டர் ஜெயராஜும் இயக்குகிறார்கள்
பிரியதர்ஷன், ஏ.எல்.விஜய், பிரகாஷ்ராஜ், ஜெயம் ரவி, அமலாபால் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்ட, பிரபுதேவா ஏற்பாடு செய்திருந்த இதற்கான அறிமுக விழாவில் ‘அண்ணன்டா… தம்பிடா” என்கிற ரேஞ்சில் நடனப்புயல் பிரபுதேவாவும் இளம்புயல் ஜெயம் ரவியும் தங்களது பேச்சில் பாசமழை பொழிந்தனர்.
பிரபுதேவா பேசியபோது, “ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியை தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தி்ல், ஜெயம் ரவியின் நடிப்பில், இமானின் இசையமைப்பில் உருவாகும் படத்தை தயாரிக்கிறேன். .நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா என்றாலும், எனக்கு ஜெயம் ரவி, எனக்கு உடன்பிறவா தம்பி ஆவார்” என்றார்.
ஜெயம் ரவி பேசும்போது, “பிரபுதேவா அவர்களை நான் படிக்கிற காலத்தில் இருந்தே ரசித்தவன். இப்போதும் அவரது சிறந்த ரசிகன் நான். அவரது இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தில் நடித்துள்ளேன். அந்த படத்தில் நடித்தபோது என்னை ஒருநாள்கூட பிரபுதேவா மாஸ்டர் திட்டியதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னிடம் அவர் அதிக பாசமாகவே இருப்பார். அவரை ஒரு நடன மாஸ்டர் என்றோ, இயக்குனர் என்றோ நினைக்கவே தோனாது. அவரைப்பார்த்தாலே ஒரு அண்ணன் பீல்தான் வரும்” என்றாரே பார்க்கலாம்.. உண்மையான அண்ணன் தம்பி தோற்றார்கள் போங்கள்..