அறிமுகப்படுத்திய இயக்குனரை தூக்கி எறிந்த புருவ அழகி


கடந்த ஒரு வருடமாக மலையாளத்தில் உருவான ஒரு அடார் லவ் என்கிற படத்தில் இடம்பெற்ற ஒரே பாடலில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் புருவ அழகி என்று அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த பாடல் வெளியான பின்பு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் விளம்பர படங்கள் மற்றும் இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஒரு அடார் லவ் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. பாடல்களிலும் வீடியோக்களிலும் ரசிகர்களை கவர்ந்த புருவ அழகியால் மொத்த படத்திலும் தனது மோசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுக்க முடியாமல் போனது. படத்திற்கு அது மிகப்பெரிய மைனஸ் ஆகவும் அமைந்தது.

இந்த நிலையில் திடீரென கிடைத்த புகழால் பிரியா வாரியர் நடவடிக்கை மாறிவிட்டது என்றும் தான் போன் செய்தால் கூட எடுப்பது இல்லை என்றும் குறைபட்டுக்கொண்டார் படத்தின் இயக்குனர் ஓமர் லுலு. அதற்கு பதிலடி தரும் விதமாக, “நானும் வாயைத் திறந்தால் சொல்வதற்கு நிறைய பழைய கதைகள் என்னிடமும் இருக்கின்றன ஆனால் சொல்லாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்,, நேரம் வரும்போது விதியே அவற்றை வெளிப்படுத்தும்” எனக்கூறி இயக்குனருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார் பிரியா வாரியர்.