கடந்த ஆறுமாத காலமாகவே அவ்வப்போது சோஷியல் மீடியா, இணையதளங்களில் உலாவும் பலர் கண்களில் தட்டுப்படுவது தான் ‘ஒன்பது குழி சம்பத்’ என்கிற படத்தின் டைட்டில்.. ‘ஒன்பது குழி சம்பத்’ என்றதும் ஏதோ நில விவகாரம் தொடர்பான படமென்று நினைத்துவிடவேண்டாம்..
இருபது வருடங்களுக்கு முன்பு சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாடிய கோலி விளையாட்டில் ‘ஒன்பது குழி’ என்பது ஒரு வகையான விளையாட்டு.. அதில் எக்ஸ்பர்ட் தான் இந்த ‘ஒன்பது குழி சம்பத்’..
கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுசீந்திரன், ஆண்மை தவறேல் இயக்குனர் குழந்தை வேலப்பன், மதுபானக்கடை கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் குழந்தை வேலப்பன் பேசும்போது, “போன வருடம் இந்தப்படத்தின் வெப்சைட் அறிமுக விழாவுக்கு வந்திருந்தேன்.. மேடையில் உட்கார்ந்திருக்கும் எல்லோரும் ஆண்களாகவே இருக்கிறார்களே என நினைத்து, கீழே அமர்ந்திருந்த படத்தின் கதாநாயகியை மேலே வரும்படி கோரிக்கை வைத்தேன்..
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் திரு எப்படியோ அதை மட்டும் வீடியோவாக கட் பண்ணி யூடியூப்பில் போட்டுவிட்டார். சமீபகாலமாக என் வீட்டில் எனக்கு திருமணத்திற்காக பெண் பார்த்து வருகிறார்கள்.. ஒரு பெண் வீட்டினர், மாப்பிள்ளைதான் சினிமாவில் இருக்கிறாரே என நினைத்து என் பெயரை கூகுளில் தட்டி பார்த்துள்ளனர்..
கரெக்டாக இந்த வீடியோவைத்தான் அது காட்டியிருக்கிறது.. அப்புறம் என்ன.. எல்லோர் முன்னிலையிலும் ஹீரோயினையே மேடைக்கு கூப்பிடுகிறாரே.. நிஜத்தில் இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாரோ என எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.. இப்போது வேறு பெண் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார் ஜாலியாக.
ஆச்சர்யமாக நேற்றும்கூட மேடை முழுதும் ஒரே ஆண்களாகத்தான் அமர்ந்திருந்தனரே தவிர, மருந்துக்கு கூட பெண் ஒருவரும் இல்லை.. இந்தமுறை குழந்தை வேலப்பனும் கதாநாயகியை கூப்பிடவில்லை. கதாநாயகியும் விழாவிற்கு வந்திருக்கவில்லை.