தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி தாணு பதவியேற்றதில் இருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரச்சனைகள் சங்கத்தை சுழன்றடிக்கின்றன.. “ஆண்டவா விநியோகஸ்தர்களையும் தியேட்டர் அதிபர்களையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.. தயாரிப்பாளர்களிடம் இருந்து சங்கத்தை நீ காப்பாற்று” என ரஜினி பாணியில் புலம்பிக்கொண்டு இருக்கிறாராம் கலைப்புலி தாணு.
காரணம் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களில் சிலர் தன்னிஷ்டம் போல செயல்படுவது தானாம். இதனால் சங்கத்தின் மரியாதை கெட்டுவிடுமோ என்று அஞ்சுகிறது தாணு தரப்பு. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு நிகழ்வுகள அரங்கேறியுள்ளன.
முதலாவதாக தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்திருந்த நேரத்தில் அஜித்தின் படப்பிடிப்பு மட்டும் சங்கத்துக்கு கட்டுப்படாமல் நடந்துகொண்டுதான் இருந்தது. அதை ஏன் என்றுகூட தயாரிப்பாளர் சங்கத்தால் கேட்கமுடியவில்லை.
அடுத்ததாக பாயும் புலி பட விவகாரத்தில் வேந்தர் மூவிஸுக்கு மிரட்டல் வந்தபோது கடந்த 4ஆம் தேதி முதல் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம் என தாணு அறிவித்தார். ஆனால் மறுநாள் காலையிலேயே, அதே தேதியில் வெளியாக வேண்டி விளம்பரம் செய்யப்பட்டு தயாராக இருந்த ‘சவாலே சமாளி’ படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டியன், “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. திட்டமிட்டபடி என் படம் வெளியாகும் என அறிவித்தார்.
கூடவே இன்னொரு படமான ‘போக்கிரி மன்னன்’ தயாரிப்பாளரும் தன் படமும் வெளியாகும் என சொல்லிவிட்டார். இவ்வளவு ஏன் எந்தப்படத்திற்காக தாணு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரோ, அந்தப்படத்தின் ஹீரோவான விஷாலே என் உயிரை கொடுத்தாவது படத்தை ரிலீஸ் செய்வேன் என சூளுரைத்தார்.. எல்லோரும் தன்னிச்சையாக இப்படி அறிவிப்பை வெளியிடுவதை கண்ட தாணு, இப்டியே போனால் சங்கத்தின் பேச்சுக்கு மதிப்பு இருக்காது என அன்று மாலையே, படங்கள் வழக்கம்போல மறுநாள் ரிலீஸாகும் என அறிவித்து சமாளித்தார்.
இப்போது இன்னொரு சிக்கல் என்னவென்றால் தனி ஒருவன் படமும் அதிபர் படமும் ஒரே நாளில் வெளியானது அல்லவா..? ஆனால் தனி ஒருவன் படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் வித்தித்த அளவுகோலை மீறி விளம்பரம் செய்யப்பட்துள்ளதாம்..
நாங்களும் அதேபோல விளம்பரம் செய்திருந்தால் எங்கள் படத்திற்கும் ஓரளவு வரவேற்பும் வசூலும் வந்திருக்குமே என அதிபர் பட தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட, தனி ஒருவன் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தை கூப்பிட்டு விசாரிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
ஆக நடக்கும் நிகழ்வுகளை பார்த்தல், சங்க தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை அறிவிப்பதும், பின்னர் எதிர்ப்பு கண்டு அப்படியே பல்டி அடித்து தனது முடிவை வாபஸ் வாங்குவதும் நன்றாகவே தெரிகிறது.