அடிப்படையில் ஆர்.கே.செல்வமணி ஒரு இயக்குனர்.. அதன் பின் தான் பெப்சியின் தலைவர்.. ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்துள்ள ஆர்.கே.செல்வமணிக்கு பெப்சியில் அங்கம் வகிக்கும் சில சங்கங்கள் கொடுக்கும் டார்ச்சர்களும் அதனால் படப்பிடிப்பு செலவு எகிறிய அனுபவங்களும் நிறையவே இருக்கும்..
இத்தனையும் தெரிந்தும் தான் பெப்சி தலைவர் ஆகிவிட்டோம் என்பதற்காகவே சங்கங்களில் இருப்போர் சிலரின் தவறை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல், தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக ஆகஸ்ட்-1 முதல் போராட்டம் அறிவித்துள்ளது என்ன வகையான தைரியம் என தெரியவில்லை..
சங்கங்களை உடைப்பதெல்லாம் இந்த காலத்தில் பெரிய வேலையில்லை.. பலபேருக்கு வேலை தெரிந்தாலும் சினிமா சங்கங்களில் சேர யூனியன் கார்டு எடுப்பதற்கே லட்சங்களில் காசை அழ வேண்டி இருப்பதால் வேலைகிடைக்காமல் தவிக்கிறார்கள்..
யாரை வேண்டுமானாலும் படப்பிடிப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால், இவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒன்று கூடி புதிய சங்கத்தை உருவாக்கி, நியாயமான ஊதியத்திலோ அல்லது தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயிக்கும் ஊதியத்திலோ வேலை பார்க்க தயாராகும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பெப்சி ஸ்ட்ரைக் அறிவித்தும் கூட, படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றால், பெப்சியில் உள்ள உறுப்பினர்களின் வாழ்க்கை தான் கேள்விக்குறியாகி விடும். தங்கள் வாழ்வாதாரத்திற்காக பெப்சியில் உள்ள பல தொழிலாளர்கள் சங்கங்களில் இருந்து வெளியேறும் சூழலும், அதனால் சங்கங்கள் உடையும் அபாயமும் கண்ணெதிரே தெரிகிறது.
இதில் தயாரிப்பாளர் சங்கத்தை குறை கூறி பயனில்லை. அவர்களை பொறுத்தவரை டார்ச்சர் பண்ணாத, கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலைபார்ப்பவர்களை தான் விரும்புவார்கள்.. அப்படியும் அவர்கள் பெப்சி தொழிலாளர்களை வேண்டாம் என சொல்லவில்லையே.. தாங்கள் நிர்ணயிக்கும் விதிகளுக்கும் ஊதியத்துக்கும் கட்டுப்பட்டால் அவர்களுடனும் பணியாற்றுவோம் என்றுதானே அறிவித்துள்ளார்கள்..
அப்படிப்பட்ட சூழலில் கொஞ்சம் இறங்கிவந்து இணக்கமான சூழலை உருவாக்குவதை விட்டுவிட்டு, வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதன் மூலம் ஆப்பசைத்த குரங்கின் நிலையில் தான் இருக்கிறார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.