பெப்ஸியுடன் மட்டும் தான் வேலைசெய்யவேண்டும் என்கிற கட்டாயம் இனி இல்லை.. விருப்பப்பட்டவர்கள் யாருடனும் படப்பிடிப்பை நடத்தலாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துவிட்டது. அதில் உறுதியாகவும் நிற்கிறது. இதனால் பெப்சி, வேலை நிறுத்தம் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தது..
இதுதொடர்பாக ரஜினி, கமல் இருவரும் இதில் தலையிடவேண்டும் என விரும்பிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் இருவரையும் தனித்தனியே சந்தித்தார். “இப்போது திரையுலகம் சிக்கலான சூழலில் இருக்கிறது செல்வமணி.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க” என கூறினாராம் கமல்.
ரஜினியோ தனது தரப்பு விளக்கத்தை ஒரு அறிக்கையாகவே வெளியிட்டுவிட்டார். அதில், “எனக்கு பிடிக்காத சொற்களில் ‘வேலைநிறுத்தம்’ என்கிற வார்த்தையும் ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும், சுய கவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி, அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்.” என கூறப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் என்கிற வார்த்தை தனக்கு பிடிக்காது என கூறியிருப்பதன் மூலம் ஆர்.கே.செல்வமணியின் அவசரக்குடுக்கை தனமான முடிவையும், சுய கவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி, அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம் என்கிற வார்த்தைகளின் மூலம் விஷால் எதேச்சதிகாரமாக செயல்படுவதையும் சமமாக சுட்டிக்காட்டி ரஜினி இருவருக்குமே குட்டு வைத்துள்ளார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.