தமிழில் தான் டைட்டில் வைக்கவேண்டும் என சட்டம் போட்டாலும் போட்டார்கள், இந்த சினிமா உலகத்தில் தமிழில் டைட்டில் வைக்கிறேன் என சிலர் படுத்துகிற பாடு இருக்கிறதே அப்பப்பா.. தாங்க முடியவில்லை.. டைட்டில் தமிழில் இருக்கும். ஆனால் படத்தை பத்து நிமிடம் கூட உட்கார்ந்து பார்க்க முடியாது.. பல படங்கள் இந்த ரகம் தான்.
இன்னும் சிலர் புதுசா டைட்டில் யோசிச்சு சிரமப்படுவதை விட ஏற்கனவே ஹிட்டான படத்தின் டைட்டில் எதுனா இருந்தா அப்படியே பிக்ஸ் பண்ணிவிடலாம் என தேடலில் இறங்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் தேடலுக்கு இலக்காவது என்னவோ எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் பட டைட்டில்கள் தான்.
ஆனால் இப்போது எம்.ஜி.ஆர் பட டைட்டில்களை தொட்டால் மேலிடத்தில் இருந்து ஆப்பு உறுதி என்பதால் அடுத்த டார்கெட் ரஜினி படங்கள் தான். ஒரு காலத்தில் தனுஷ் மட்டுமே ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’ என ரஜினி டைட்டிலை சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தார். கார்த்தியின் நான் மகான் அல்ல, சத்யராஜ்-சுந்தர்.சியின் குரு சிஷ்யன் என இன்னும் சிலரும் கூட ரஜினி டைட்டிலை பயன்படுத்தினார்கள். இதில் மாப்பிள்ளை படம் சரியாக போகாததால், ‘மாப்பிள்ளை ஓடலை எனும்போது அது ரஜினி படத்தையும் சேர்த்து தானே குறிக்கும். அதனால் அடுத்து ரஜினி படங்களின் டைட்டில் பக்கம் தனுஷ் திரும்பவில்லை.
கொஞ்ச நாள் அமுங்கியிருந்த இந்த ரஜினி டைட்டில் விவகாரம் இப்ப மீண்டும் சூடு பிடிச்சிருக்கு. விஷால் தன்னோட படத்துக்கு பாயும்புலின்னு பேர் வச்சு படத்தையும் முடிச்சுட்டார். அட்லீ டைரக்சனில் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘மூன்றுமுகம்’னு பேர் வைக்க இருக்கிறதா சொல்றாங்க. இப்ப ஜி.வி.பிரகாஷ் புதுசா நடிக்கிற படத்துக்கு ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ என பெயர வைக்கலாமா, வைத்தால் அனுமதி கிடைக்குமா என யோசித்து வருகிறார்களாம்.
இது இப்படின்னா, படத்துக்கு சிலர் ஆங்கிலத்துலேயோ அல்லது தமிழ் மாதிரி தெரியுற ஏதோ ஒரு பாஷையிலேயோ (அப்பாடக்கர், மொக்கராஜா) பெயரை முதலில் சூட்டி விடுகிறார்கள்.. படம் ரிலீஸாகும் நேரத்துலதான் அவர்களுக்கு வரிவிலக்கு பிரச்சனை ஞாபகத்துக்கு வரும் போல.. உடனே அவசர அவசரமாக தமிழுக்கு டைட்டிலை மாற்றுவார்கள்.
சூர்யாவின் ‘மாஸ்’” மாசு என்கிற மாசிலாமணி’ ஆனதும் இப்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘அப்பாடக்கர்’ (என்ன பாஷையோ) படத்துக்கு கமல் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘சகலகலா வல்லவன்’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதும் இப்படித்தான்.
கேரளாவில் இருந்து வந்த கௌதம் மேனனை இந்த விஷயத்தில் பாராட்டியே ஆகவேண்டும். தனது படங்களுக்கு எல்லாம அழகு தமிழில் பெயர் வைப்பதுடன், பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு கூட தமிழ் பெயர்களை சூட்டி அவற்றை ரசிகர்கள் மனதில் பதிய வைப்பதில் வெற்றியும் பெற்று வருகிறார்.. மற்றவர்களும் இவர் பாணியை பின்பற்றினால் நன்றாக இருக்கும்..
அதைவிட்டுவிட்டு ரஜினி, கமல் படங்களின் டைட்டில்களை வைத்து, அந்த படங்களுக்கான மரியாதையையும் சாதனையையும் குறைக்க வேண்டாமே..!