சூப்பர்ஸ்டார் ரஜினி அரசியலுக்குள் தான் நுழையப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து நேற்றுவரை அவர் பொது மேடைகளில், மீடியாக்களின் முன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அதிகார வர்க்கத்திடமும் அரசியல்வாதிகளிடமும் தான் கோபத்தை உண்டாக்கின. ஆனால் பொதுமக்களும் நடுநிலையாளர்களும் அதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கவில்லை.. சொல்லப்போனால் வரவேற்கவே செய்தார்கள்.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏஅசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நேற்று சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் சிலர் காவலர்களைத் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்து, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ’’வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார் ரஜினி.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே போலீஸாரின் அராஜகத்தால் அவர்கள் மீது கோபத்தில் இருக்கும் பொதுமக்களிடம் ரஜினியின் கருத்து எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தை பற்றியும் அதில் நிகழ்த்தப்பட்ட அடிதடி, வன்முறை பற்றியும் அவர் கருத்து சொல்லாமல் இருந்திருக்காலமே என்றும், தேவையில்லாமல் வான்டட் ஆக வந்து போலீசாருக்கு ஆதரவாக கருத்துக்கூறியிருக்க வேண்டாம் என்றும் ரஜினியின் ரசிகர்களே கூறி வருகிறார்களாம். ஆக, முதன்முதலாக சர்ச்சை கருத்தை கூறி பிரச்சனையை வலியப்போய் ரஜினி இழுத்துக்கொண்டுள்ளாரே என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.