மேடையில் பேசுபவர்கள், குறிப்பாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கு நகைச்சுவையாக பேச வராவிட்டாலும் கூட நாகரிகமாக பேச கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்.. காமெடி பண்ணுகிறேன் பேர்வழி என காம நெடி அடிக்கும்படி பேசக்கூடாது.. பெண்கள் தொகுத்து வழங்கும்போது அது அருவையாக இருந்தாலும் இப்படி பிரச்சனை ஏற்பட்டதில்லை.
ஆண்கள் தான் கவனமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். இப்படித்தான் நாசூக்காக பேசவேண்டிய விஷயங்களை நாலு பேர் முன்னாடி இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் ‘சாஹசம்’ பட இசைவெளியீட்டு விழாவில் பேசி முகம் சுளிக்க வைத்தார் ரோபோ சங்கர்..
பிரசாந்த் நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பொக்கே கொடுக்கும் விஷயத்தில் அவ்வப்போது படத்தின் தயாரிப்பாளரும் சீனியர் நடிகருமான தியாகராஜனை கிண்டலடித்தவாறே இருந்தார் ரோபோ சங்கர். அவ்வப்போது பிரசாந்தின் அருமை பெருமைகளை கூறுகிறேன் என ஆரம்பித்தவர், “உலக அழகி ஐஸ்வர்யா ராய் இருக்காங்களே… அவங்களை முதன்முதல்ல நம்ம பிரசாந்த் சார் தான்…” என இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக சொல்லி இறுதியில் முடிக்காமல் அப்படியே விட்டார்..
உடனே கூட்டத்தில் இருந்த ஒரு அரைவேக்காட்டு பிரசாந்த் ரசிகர் ஒருவர், “ரோஜாவையும் கூட எங்க பிரசாந்த் தான் முதல்ல..” என தன் பங்குக்கு எடுத்துக்கொடுத்தார்… பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் அமர்ந்திருந்த மேடையில் காமெடி பண்ணுகிறேன் என ரோபோ சங்கர் பேசிய பேச்சு ரசிக்க தகுந்ததாக இல்லை.