சாதனைகள் என்பதே இன்னொருவரால் முறியடிக்கப்படுவதற்குத்தானே.. கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகள் ஏராளமாக இருந்தாலும் அவ்வப்போது யாரோ ஒரு சிலர் அவரது ஒரு சில சாதனைகளையாவது முறியடித்துக்கொண்டு தானே வருகிறார்கள்.. அதற்காக சச்சின் கவலைப்பட்டுக்கொண்டா இருக்கிறார்.
அதேபோலத்தான் சினிமா ரெக்கார்டுகளும்.. இதுநாள் வரை எந்த இந்தி(ய)ப்படமும் பண்ணாத சாதனையை எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’ பண்ணிவிட்டது.. இதில் நடித்த பிரபாஸ் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களிலே நான்காவதோ அல்லது ஐந்தாவதாகவோ தான் இருக்கிறார்
அதற்காக ரஜினிகாந்தும் ஷாருக், சல்மான், அமீர் கான்களும் காண்டாகிறார்களா என்ன..? இது ஒரு இயக்குனருக்கு கிடைத்த வெற்றி.. தனது முந்தைய படங்களின் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராக இருந்த ஷங்கருக்கு சமமாக வந்தார் ராஜமவுலி.. ‘பாகுபலி’ படம் அவரை ‘அதுக்கும் மேல’ கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டது.
பிரமாண்டம் என்றால் ஷங்கர்.. ஷங்கர் என்றால் பிரமாண்டம் என பேசிய வாய்கள் எல்லாம் இப்போது ராஜமவுலியின் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டன. இப்போது ஷங்கரின் முன் உள்ள சவால் எல்லாம், ராஜமவுலி காட்டிய பிரமாண்டத்தையும், வசூலையும் தாண்டாவிட்டாலும் கூட, அதற்கு சமமாகவாவது தனது அடுத்த படத்தை கொடுத்தாகவேண்டும் என்பதுதான்.
அதனால் தான் ரஜினியை வைத்து தான் இயக்கவுள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தீயாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டாராம். எந்த அளவுக்கு என்றால் அவரது டைரக்சன் வாழ்க்கையிலும் சரி, அல்லது வேறெந்த இயக்குனரின் வாழ்க்கையிலும் சரி… இதுவரை இல்லாத அளவுக்கு 28 இயக்குனர்களை தனக்கு உதவியாக வைத்துள்ளாராம்..
படத்தின் எந்த ஒரு பாகத்திலும் ஒரு சிறிய குறை இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை உதவியாளர்களாம். அதுசரி.. அறுக்க தெரியாதவனுக்கு 58 அருவா…. அறுக்க தெரிஞ்சவனுக்கு எதுக்கு 28 அப்ரசென்டுக…? என கோடம்பக்கத்தில் இப்போதே முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்..