நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு என வடிவேலு சொல்லும் வசனம் போல காமெடி நடிகராக இருந்தவரைக்கும் வருடத்திற்கு பத்துக்கு குறையாமல் சந்தானம் நடித்த படங்கள் வெளியாகி கொண்டு இருந்தன. எப்போது ஹீரோவாக ஆசைப்பட்டு காமெடிக்கு குட்பை சொன்னாரோ, அன்றைய தினத்திலிருந்து சந்தானத்தை சனி தசை தான் பிடித்து ஆட்டுகிறது.
கடைசியாக சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியாகி ஒரு வருட காலம் ஆகிவிட்டது. ஆனால் அடுத்த படம் வெளியாவதற்கான அறிவிப்பை காணோம்.. இத்தனைக்கும் சர்வர் சுந்தரம், சக்கைபோடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி, ஓடி ஒடி உழைக்கணும் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றில் இரண்டு படங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ரிலீஸாக முடியாமல் தவிக்கின்றன. இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடித்து வந்த விக்ரமே வருடத்திற்கு இரண்டு படம் ரிலீஸ் பண்ணும் அளவுக்கு மாறிவிட்டார். இசையமைப்பாளர்களாக இருந்து ஹீரோக்களாக மாறினாலும் கூட, இசையமைக்கும் வேலையுடன் சேர்த்து வருடங்களுக்கு இரண்டு படங்களையாவது ரிலீஸ் செய்து விடுகின்றனர் விஜய் ஆண்டனியும் ஜி.வி.பிரகாஷும்..
இந்தமாதிரி கூடுதலாக எந்த சுமையும் இல்லாத சந்தானம் வருடத்திற்கு மூன்று, அட்லீஸ்ட் இரண்டு படங்களாவது ரிலீஸ் பண்ணவேண்டாமா..? பண்ணுகிறார்.. படங்களை அல்ல.. பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என ஏதாவது ஒன்றை ரிலீஸ் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்.. சந்தானம் என்கிற ஒருவர் சினிமாவில் இருக்கிறார் என்பதை ரசிகர்கள் இவற்றைப்பார்த்து தான் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய சூழலை சந்தானமே உருவாக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.