பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்கலாமா..? ; பிழை சொல்லும் பாடம்


அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா சிறுவர்களை மையப்படுத்தி இயக்கியிருக்கும் பிழை படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

காக்கா முட்டை படத்தில் வந்த சின்ன காக்கா முட்டையாக ரசிகர்களை ஈர்த்த ரமேஷ் மீண்டும் ஒரு சிறுவர்கள் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியிருக்கும் படத்தில் ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நசத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுவர்களின் அப்பாவாக சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர்.

பள்ளிக்குச் செல்வது பிடிக்காமல் ஊர் சுற்றும் மாணவர்களான ரமேஷ், நசத், கோகுல் ஆகியோர் தங்கள் அப்பாக்களின் கண்டிப்பு பிடிக்காமல் ஊரை விட்டு ஓட, அவர்கள் சந்திக்கும் அனுபவங்களாக அமைந்துள்ளது பிழை டீசர். சிறுவர்களின் சுதந்திர மனமும் நடைமுறை யதார்த்தத்திலிருக்கும் பயங்கரங்களையும் பேசும் பிழை மே மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளது.

இந்த விழாவில் பேசிய நடிகர் சார்லி, ““படத்தில் சின்னப்படம் எது, பெரிய படம் எது என்பதெல்லாம் ரிலீஸுக்கு முன்னால் தெரியாது. படம் வெளியானதும்தான் ‘அது பெரிய படம்’ என்பார்கள். அப்படி ஒரு படம்தான் இந்தப் ‘பிழை’. போட்ட பணத்தை எடுக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று எடுக்கப்பட்ட… தைரியமான படம் இது.

கதை எங்கே நடக்கிறதோ அங்கேயே போய் எடுத்தார்கள். ஆறு மணிக்குக் கிளம்பி பதினோரு மணிக்கு லொகேஷனுக்குப் போய் 12 மணி உச்சி வெயிலில் கல் குவாரியில் நடித்தோம். அவ்வளவு நம்பகத்தன்மை இருக்கிறது படத்துக்குள்.

இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா ஒரு சிறந்த ஓவியர். அதனால்தான் படத்தையும் காட்சிக்குக் காட்சி ஓவியமாக எடுத்திருக்கிறார். என்னையும் மேக்கப் இல்லாமல் டை அடிக்காமல் இயல்பான தாடியுடன் நடிக்க வைத்திருக்கிறார்.

நீண்ட காலத்துக்குப் பிறகு பைசல் இசையில் பாடல்வரிகள் புரியும்படி இருக்கின்றன. இதில் நடித்த கோகுல் போன்ற சிறுவர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். வெளியானதும் இந்தப்படம் பேசப்படும் படமாக இருக்கும். தலைப்பில் ‘பிழை’ இருந்தாலும் பிழையில்லாத வெற்றிப் படமாக இருக்கும்” என்கிறார்.