தனக்குத்தானே ரிவீட் வைத்துக்கொண்ட சிம்புதேவன்..!

ஃபேண்டசியாக படம் எடுப்பவர் என்பதை தவிர மிகப்பெரிய இயக்குநர்கள் பட்டியலில் எல்லாம் அவர் பெயர் இருந்தது இல்லை.. ஆனால் விஜய் படம் எப்போது கமிட்டானதோ, அவருக்கு ஏதோ ஸ்டார் அந்தஸ்து வந்துவிட்டது போன்ற நினைப்பு.. திரையுலகத்தை பொறுத்தவரை அவர் அப்படி நினைத்துக்கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் அவரை ஒரு இயக்குனராக வளர்த்துவிட்ட பத்திரிகைகளிடமே பந்தா காட்ட ஆரம்பித்தது தான் இப்போது அவருக்கே எதிராக திரும்பிவிட்டது. விஷயம் இதுதான்.. விஜய் பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்களுக்கு ‘புலி’ படத்தின் டீசரை வெளியிடலாம் என முடிவு செய்திருக்க, அதற்கு ஒருநாள் முன்னதாகவே அது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது.

அதில் சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ‘புலி’ படத்தின் புகைப்படங்களும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்காகி உள்ளதால் மீண்டும் ‘புலி’ படக்குழுவினர் கமிஷனரிடம் புகார் கொடுத்த கையோடு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது புலி படத்தின் புகைப்படங்கள் எப்படி லீக்காகின என்பதைப்பற்றி ரொம்பவும் ஆவேசமாக பேசினார் சிம்புதேவன். இதற்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு நிருபர், சிம்புதேவனிடம் பேசுவதற்காக போனில் தொடர்புகொண்டபோது, தேவையில்லாமல் போன் பண்ணாதீர்கள்., எஸ்.எம்.எஸ் மட்டும் பண்ணுங்கள்.. தேவைப்பட்டால் நானே கூப்பிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த விஷயம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவியிருந்ததால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிம்புதேவனை கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டனர். ‘புலி’ பட ஸ்டில்கள் வெளியானது உங்கள் படத்துக்கு பப்ப்ளிசிட்டி தானே, ஏதோ ராணுவ ரகசியம் லீக்கானது போல கமிஷனர் வரை சென்று புகார் கொடுப்பதெல்லாம் ஓவரில்லையா என கேட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் கோபத்தை எதிர்பாராத சிம்பு தேவன் எப்படியோ ஒரு வழியாக பதில் சொல்லி சமாளித்து எஸ்கேப் ஆனார்.