சிம்புவை பொறுத்தவரை தற்போதுள்ள நடிகர் சங்கமாகட்டும், தயாரிப்பாளர் சங்கமாகட்டும் இரண்டுமே அவருக்கு எதிரி என்பதுபோலத்தான் பார்ப்பார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர் சங்கத்தோடு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிம்பு கலந்து கொண்டார்.
இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர் என்பதால், அதன் உறுப்பினராக இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே ‘அஅஅ’ படப்பிரச்சினை தொடர்பாக அவருக்கு ரெட்கார்டு போடும் அளவுக்கு நிலவி வரும் சமயத்தில், தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் சிம்பு கலந்துகொண்டதால் பரபரப்பு நிலவியது.
ஆனால், இக்கூட்டத்தில் தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தனது தரப்பு ஆலோசனைகளை எடுத்துரைத்திருக்கிறார்.
“தமிழ்த் திரையுலகில் இருப்பதே பத்து பெரிய நாயகர்கள் தான். அவர்களுடைய சம்பளத்தைக் குறைப்பதால் தமிழ் சினிமாவில் ஒன்றுமே ஆகிவிடாது. கடவுள் புண்ணியத்தில் நானும் அதில் ஒருத்தன். ஆனால், நீங்கள் எதற்கு தமிழ் சினிமாவில் கருப்பு பணத்தில் இயங்குகிறீர்கள்?
அனைத்தையும் வெள்ளைப் பணமாகக் கொடுத்து, ஒழுங்காக வரி கட்டி கணக்கு காட்டுங்கள். எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது நாயகர்களுக்கு தெரியவேண்டும். கருப்பு பணம் என்பதால் தான் வெளியே தெரியவில்லை.
இதே வெள்ளை பணமாக இருந்தால் அனைத்துமே வெளியே தெரிந்துவிடும். தமிழ் சினிமாவில் முதலில் கருப்பு பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும். கருப்பு பணமே இருக்கக்கூடாது என சட்டம் கொண்டு வாருங்கள்.
திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு எவ்வளவு பேர் படம் பார்க்கிறார்கள் என்பது நடிகர்களுக்கு தெரியவேண்டும். டிக்கெட் விலை எவ்வளவு, தயாரிப்பாளருக்கு எவ்வளவு பணம் வருகிறது உள்ளிட்ட விவரங்கள் நடிகர் மற்றும் இயக்குநர் என அனைவருக்குமே தெரியவேண்டும்.
“நாயகர்கள் தாமதமாக வருவதால் படம் தாமதமாக வருகிறது என்கிறீர்கள். 9 – 6 கால்ஷீட் என்றால் 11:30 மணிக்கு வருகிறேன். ஆனால் அன்றைய தினம் நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே 4 மணிக்குள் முடித்துக் கொடுக்கிறேனே அதை ஏன் யாரும் பேசுவதில்லை.
எத்தனை மணிக்கு வந்தால் என்ன? அன்றைய வேலையை முடித்தேனா இல்லயா” என்று ஆக்ரோஷமும் காட்டினார். இதற்கு அவரை இயக்கிய இயக்குநர்களும் தங்கள் தரப்பு ஆதரவையும் தெரிவித்தார்கள்.
திரையரங்குகள் தரப்பை 2 வகையாக பிரிக்க வேண்டும். ஏ வகை என்றால் 150 ரூபாய் கூட டிக்கெட் விலையை வைத்துக் கொள்ளட்டும். பி வகை என்றால் 50 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யுங்கள். எத்தனை சிறு தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். ஷங்கர் சார் படத்துக்கு 150 ரூபாய், சிறு இயக்குநரின் படத்துக்கும் 150 ரூபாய் என்றால் எப்படி? என்று திரையரங்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சிம்பு பேசினார்.
தற்போது ஏப்ரல் மாத வெளியீட்டை முன்வைத்து பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ‘காலா’ உள்ளிட்ட பல படங்களில் அனைத்து நடிகர்களுடைய உழைப்பு அடங்கியிருக்கிறது. அதையும் கருத்தில் கொண்டு வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும். அதை விடுத்து பொதுவாக சிறுபடங்கள் வெளியீட்டுக்குப் பிறகே பெரிய படங்கள் என்று கூறுவது தவறானது என்றும் சிம்பு பேசினார்.
இது அனைவருக்குமே ஆச்சர்யம். ஏனென்றால் அவருடைய படங்கள் எதுவும் வெளியாகாத சூழலில், மற்ற நடிகர்களின் படத்துக்காக பேசுவது இதர நடிகர்களிடம் இல்லாத குணம்” என்று பகிர்ந்துகொண்டார்.